இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 23 – பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வலியுறுத்தி இம்ரான் கான் உள்பட அவரது கட்சியின் 34 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று பதவி விலகியுள்ளனர்.
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆட்சி மீதான சந்தேகங்களும், எதிர்ப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அவரை பதவி விலக வலியுறுத்தி கடும் போராட்டங்களை நடத்தி வரும் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கானுடனான சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அவர் உட்பட அவரின் கட்சியின் 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிவி விலகுவதாக அறிவித்தனர். மேலும், அதற்கான ராஜினாமா கடிதங்களை, நாடாளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் அவர்கள் சமர்பித்தனர்.
எனினும், ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு பெரும்பான்மை (190) இருப்பதால், ஆட்சியை கவிழ்க்கும் இம்ரான்கானின் எண்ணம் தோல்வியில் முடிந்தது.
தற்போது உள்ள நிலையில், நவாஸ் ஷெரீப்பை பதவியில் இருந்து நீக்க இம்ரான்கான் கட்சியினர் பெரும் பேரணிகளையும் போராட்டங்களையும் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.