சென்னை, ஆகஸ்ட் 23 – பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– “அடுத்த மாதம் 25–ம் தேதி தொடங்கும் ஐ.நா. பொது அவைக் கூட்டத்தில் உரையாற்ற ராஜபக்சே அழைக்கப்பட்டிருக்கிறார்.
கூட்டத்தின் முதல் நாளிலேயே பிற்பகல் அமர்வில் முதல் ஆளாக பேச அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா. அமைப்பையும், அதன் பொதுச் செயலாளர் பான்.கி.மூன், ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை ஆகியோரையும் அவமதித்த இலங்கை மீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் சரியானதாக இருக்கும்.
அதைவிடுத்து ராஜபக்சேவுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளித்து ஐ.நா. அவையில் பேச அனுமதிப்பது போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் ஊக்குவிக்கும் செயலாக அமையும்.
ஐ.நா. பொது அவையில் உரையாற்ற ராஜபக்சேவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஐ.நா. திரும்பப் பெற வேண்டும். ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு ஒப்புக்கொள்ளும் வரை இலங்கை மீது பொருளாதார தடை விதிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு மேற்கொள்ள வேண்டும்.
இந்த கோரிக்கைகளை ஐ.நா.விடம் வலியுறுத்தும்படி இந்திய அரசுக்கு தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வு கொண்ட அரசியல் கட்சிகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.