லண்டன், ஆகஸ்ட் 25 – கடந்த 1982 –ம் ஆண்டு வெளியாகி, அனைவராலும் பெரிதும் கவரப்பட்ட ‘காந்தி’ திரைப்படத்தை இயக்கிய ரிச்சர்ட் அட்டென்பரோ (வயது 90) நேற்று காலமானார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல நடிகரும், இயக்குநருமான ரிச்சர்ட், மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும், ‘காந்தி’ திரைப்படத்தை இயக்கி கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
இந்த படத்தின் மூலம் சிறந்த இயக்குனர் விருது பெற்ற இவர், பல ஆங்கிலப் படங்களை தயாரித்து, இயக்கி, நடித்ததுடன் பல்வேறு திரைப்பட விழாக்களின் நடுவர்கள் குழுவிலும், விருதுகளுக்கான தேர்வுக் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.
சுமார் 60 ஆண்டுகளாக திரையுலகில் பணியாற்றிய அனுபவம் நிறைந்த ரிச்சர்ட் அட்டென்பரோ, ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு மனிதநேய காரியங்களுக்கான நல்லெண்ணத் தூதராகவும் தொண்டாற்றி இருக்கிறார்.
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மபூஷன்’, பிரிட்டனின் உயரிய ‘லார்ட்’ உள்ளிட்ட பல விருதுகளையும், பட்டங்களையும் ரிச்சர்ட் அட்டென்பரோ பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.