வாஷிங்டன், ஆகஸ்ட் 25 – சீனக் கற்பரப்பின் மேல் பரந்த அமெரிக்க விமானத்தை, சீனாவின் போர் விமானம் வழிமறித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சீன கடற்பரப்பின் மேல் உள்ள சர்வதேச வான்வெளி எல்லையில் அமெரிக்காவின் கடற்படை ரோந்து விமானம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை பரந்து சென்றது.
அப்போது ஆயுதம் தாங்கிய சீன போர் விமானம், அமெரிக்க விமானத்தை மோதும் விதமாக வழிமறித்து சென்றது. இதற்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வட்டாரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க இராணுவத்தின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான்கிர்பி கூறுயுள்ளதாவது: “அமெரிக்காவின் பி–8 போசிடான் ரக விமானம் சீனக் கடற்பரப்பில் பறந்து கொண்டிருக்கும் பொழுது, சீன போர் விமானம் அமெரிக்க விமானத்தை வழிமறிக்கும் வகையில் பறந்து சென்றது கண்டிக்கத்தக்கது.
மேலும், அந்த சீன போர் விமானத்தில் ஆயுதம் ஏற்றப்பட்டிருந்தது, ஏற்புடையதல்ல. இதுதொடர்பாக சீன அரசிடம் அமெரிக்காவின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் வெளியுறவு விவகாரத்தில் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சீனாவின் தற்போதைய செயல், அமெரிக்காவுடன் சீனா வைத்துக்கொள்ள விரும்பும் இராணுவ தரப்பிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது.