கனோ, ஆகஸ்ட் 26 – நைஜீரியாவில் செயல்பட்டு வரும் போகோஹரம் தீவிரவாத அமைப்பினர், அந்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள போர்னோ மற்றும் யோபின் மாநிலத்தின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி இஸ்லாமிய ஆட்சியை நிறுவி உள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
நைஜீரியாவில் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் போகோஹரம் தீவிரவாதிகள், அந்நாட்டை இஸ்லாமிய தேசமாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் காணொளிக் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளனர். 52 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த காணொளியில் பேசிய அந்த அமைப்பின் தலைவன் அபூபக்கர் செகாவ், போர்னோ மாநிலத்தின் க்வோசா நகரத்தை கைப்பற்றி உள்ளதாகவும், அங்கு இஸ்லாமிய ஆட்சியை நிறுவி உள்ளதாக தெரிவித்துள்ளான்.
கடந்த ஆண்டு மே மாதம் முதலே க்வோசாவில் அவசர நிலை சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது தீவிரவாதிகள் அந்த பகுதியை கைப்பற்றி உள்ளதால் அங்கு பணிபுரியும் தொண்டு நிறுவனங்களும், மக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
போகோஹரம் தீவிரவாதிகள் பற்றி அரசியல் ஆய்வாளர்கள் கூறுகையில், “சமீபத்திய நாட்களில் போகோஹரம் தீவிரவாதிகள் தங்களின் திட்டத்தில் முன்னேற்றம் கண்டு வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இருப்பினும் உலக நாடுகளின் உதவியுடன் நைஜீரிய இராணுவம் இந்த நிலைமையை மாற்றும்” என்று கூறியுள்ளனர்.