கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 – எம்எச்370, எம்எச்17 என அடுத்தடுத்த இரு பெரும் பேரிடர்களை சந்தித்த பிறகு, மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இருந்து சுமார் 200 பணியாளர்கள் ராஜினாமா செய்துவிட்டதாக மலேசியா ஏர்லைன்ஸ் பணியாளர்கள் சங்கம் (Malaysia Airlines System Employees Union) அறிவித்துள்ளது.
இது குறித்து மாஸ் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அப்துல் மாலிக் ஆரிப் தி எட்ஜ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தற்போது மாஸ் நிறுவனத்தில் 3,000 விமானப் பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். நிறைய பணியாளர்கள் விமானத்தில் பறப்பதற்கே பயப்படுகின்றனர். அவர்கள் பயத்தில் இருந்து வெகு விரையில் மீண்டு வருவார்கள் என்று நம்புகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தனை பேர் ராஜினாமா செய்ததால், ஆள் பற்றாக்குறையின் காரணமாக தற்போது வேலைப்பளு அதிகரித்திருக்கிறது. 12 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். 8 மணி நேரம் கட்டாய வேலை மற்றும் 4 மணி நேரம் கூடுதல் நேர வேலை செய்ய வேண்டும் என்றும் அப்துல் மாலிக் குறிப்பிட்டுள்ளார்.
“எங்களுக்கு வேறு வழியில்லை. புதிய பணியாளர்களை நியமனம் செய்யும் பணிகளும் மெதுவாக நடந்து வருகின்றன. இருக்கும் பணியாளர்களை வைத்து தான் தற்போது விமானங்கள் பறந்து கொண்டிருக்கின்றன” என்று அப்துல் மாலிக் கூறியுள்ளார்.
வேலை காலம் முடியும் முன்னே ஓய்வு பெறும் வசதியும் தற்போது நிறுத்தப்பட்டு விட்டதாக அப்துல் மாலிக் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், மாஸ் நிறுவனத்தில் இருந்து 500 பணியாளர்கள் ராஜினாமா செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை மாஸ் நிறுவனம் மறுத்துவிட்டது.
கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை சுமார் 186 பேர் மட்டுமே ராஜினாமா செய்துள்ளதாக மாஸ் அறிவித்துள்ளது.
எம்எச்17 பேரிடருக்குப் பிறகு, விமானப் பணியாளர்கள் ராஜினாமா செய்வது அதிகரித்தது என்றும், ஆனால் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது என்றும் மாஸ் தெரிவித்துள்ளது.