புதுடில்லி, ஆகஸ்ட் 26 – இந்தியாவில் பெண் ஒருவரின் வயிற்றில் கடந்த 36 வருடங்களாக இருந்த சிசுவின் எலும்புக்கூட்டை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
இந்தியாவின் வடக்கு பகுதியிலுள்ள ஒரு மாநிலத்தில் வாழும் அந்த பெண்ணுக்கு தற்போது வயது 60. இவர் தனது 24 வயதில் கர்ப்பமாகியுள்ளார். ஆனால் அந்த கரு கருப்பைக்கு வெளியே வளர்ந்ததால் கலைந்தது.
கலைந்த அந்த கருவை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அந்த சமயத்தில் அறிவுறுத்தியுள்ளனர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வாழ்ந்த அந்த பெண், அந்த நேரத்தில் உரிய சிகிச்சை எடுக்காமல் இருந்துவிட்டார்.
(பெண்ணின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட சிசுவின் எலும்புக்கூடு)
உள்ளூர் மருத்துவரிடம் சென்று வலியை நிறுத்துவதற்காக மட்டும் மருந்துகளை எடுத்துக் கொண்டார். அதன் பின்னர், அவருக்கு அந்த வலியும் நின்று விட்டதால் அது பற்றி கவலைப்படாமல் இருந்தவருக்கு, அடுத்த சில வருடங்களில் மீண்டும் வலி வரத்தொடங்கியது.
வலிக்கான மருந்துகளை உட்கொண்டே இத்தனை வருடங்களை கடந்தவருக்கு, ஒரு கட்டத்திற்கு மேல் மருந்துகள் பலனளிக்கவில்லை.
இந்நிலையில், நாக்பூரிலுள்ள என்.கே.பி சிலேவ் இன்சிடியூட் ஆஃப் மெடிக்கல் சைன்ஸ் என்ற மருத்துவமனையில், தனது வயிற்றுப் பகுதியில் ஏற்படும் வலிக்காக சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
முதலில் இது ஒரு புற்று நோயாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பரிசோதனைகளை செய்து பார்த்த மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. காரணம் பரிசோதனையில் அப்பெண்ணின் வயிற்றுப் பகுதியின் வலது பக்கத்தில், சிசுவின் எலும்புக்கூடு இருப்பது கண்டறியப்பட்டது.
இது குறித்து அம்மருத்துவமனையின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் முவார்டாசா அக்தார் கூறுகையில், “36 வருடங்களாக தனது வயிற்றில் நன்கு வளர்ந்த சிசுவின் எலும்புக் கூட்டை சுமந்திருக்கிறார் இந்த 60 வயதான பெண். மருத்துவ வரலாற்றில் இதுவரை கேள்விப்படாத ஒன்றாக இது இருக்கின்றது.” என்று தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அக்தார் மற்றும் அவரது மருத்துவக்குழுவினர் வெற்றிகரமாக அப்பெண்ணின் வயிற்றில் இருந்த சிசுவின் எலும்புக்கூட்டை அகற்றியுள்ளனர். தற்போது அப்பெண் நலமுடன் இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
‘எக்டோபிக் பிரக்னென்சி’ என்று அழைக்கப்படும் கருப்பைக்கு வெளியே சிசு உருவாகும் இந்த பிரச்சனையில், இதற்கு முன்பு பெல்ஜியத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், இறந்த சிசுவின் உடலை 18 வருடங்களாக சுமந்த சம்பவம் தான், உலகின் அதிக நாட்கள் கருவில் சுமந்த சம்பவமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.