Home நாடு பழனிவேல் தலைமையை பேராளர்கள் குறை சொன்னதற்கு கணேசனை நீக்குவது நியாயமா?

பழனிவேல் தலைமையை பேராளர்கள் குறை சொன்னதற்கு கணேசனை நீக்குவது நியாயமா?

697
0
SHARE
Ad

Palanivel-and-MICகோலாலம்பூர், ஆகஸ்ட் 28 – கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்ற பேராக் மாநில மஇகாவின் ஆண்டுப் பேராளர் மாநாட்டில் நிகழ்ந்த அமளி துமளியால், மாநாட்டை ஒழுங்காக நடத்தவில்லை என –

நடப்பு மாநிலத் தலைவர் டத்தோ ஆர்.கணேசன் மீது பழியைப் போட்டுவிட்டு, அவரை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அகற்றியுள்ளார்.

பேராக் மாநிலத் தலைமையை தானே ஏற்பதாகவும் பழனிவேல் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே பேராக் மாநிலத் தலைமையை ஏற்றிருந்த பழனிவேல், பின்னர் கணேசனிடம் பொறுப்பை ஒப்படைத்தார். பேராக் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய செனட்டர் பதவியும் கணேசனுக்கே வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் ஒரு கட்டத்தில் இருந்தது.

ஆனால், தற்போது அதிரடியாக கணேசனை தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் பேராக் மாநிலத் தலைமைப் பொறுப்பை பழனிவேல் ஏற்றுள்ளார்.

கணேசன் மீது பழி போடுவது நியாயமா?

R.Ganesan Perakகணேசனின் (படம்) தலைமையைக் குறை கூறி, அவரை நீக்குவது தேசியத் தலைவரின் நியாயமில்லாத செயல் என பேராக் மஇகா கிளைத் தலைவர்கள் சிலர் கருதுகின்றனர்.

பேராக் மஇகா மாநாட்டில் நடந்த களேபரங்களையும், அவை குறித்த பத்திரிக்கைச் செய்திகளையும் ஊன்றி கவனித்தால், ஒன்று தெளிவாகப் புலப்படுகின்றது.

பேராக் மாநிலப் பேராளர்கள் அனைவரும் ஒருமனதாக எழுப்பிய கேள்வி பேராக் மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய செனட்டர் பதவி என்னவாயிற்று என்பதுதான். இதிலிருந்துதான் சர்ச்சைகளும் ஆரம்பமாயின.

இது கட்சியின் தேசியத் தலைமையை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விக் கணை. தேசியத் தலைவரின் உரிமை, அதிகாரம் குறித்த இந்த கேள்விக்கு, அங்கேயே அமர்ந்திருந்த பழனிவேல், இதற்கு முறையான பதிலை அளித்திருக்க வேண்டும்.

அப்படி அவர் விளக்கம் வழங்கியிருந்தால், கூட்டத்தில் ஆவேசப் பேச்சுகளோ, எதிர்ப்புகளோ மேலும் கூடுதலாக எழுந்திருக்காது, என்பதுதான் இன்றைக்கு பேராக் மாநில மஇகா கிளைகளிடையே நிகழ்ந்து வரும் விவாதமாகும்.

மத்திய செயலவை உறுப்பினரின் தலையீடு

தஞ்சோங் மாலிம் பேராளர் ஜெயராமன் என்பவர் பேசிக் கொண்டிருந்தபோது மத்திய செயலவை உறுப்பினரான கே.பி.சாமி அவரை நோக்கி சென்றது கூட்டத்தில் அமளி துமளி நிகழ்ந்ததற்கு மற்றொரு காரணம்.

மத்திய செயலவையும், மத்திய செயலவை உறுப்பினர்களும் தேசியத் தலைவரின் கட்டுப்பாட்டின் கீழ் வருபவர்கள். அங்கேயே, அந்த நேரத்திலேயே, தேசியத் தலைவர் தனது மத்திய செயலவை உறுப்பினரான கே.பி.சாமியை அடக்கியிருந்தால் – நிறுத்தியிருந்தால் – பேராக் மாநிலப் பேராளர் மாநாடும் ஒழுங்காக நடந்திருக்கும்.

ஆனால், இதையெல்லாம் அங்கேயே வீற்றிருந்த பழனிவேல் செய்யாமல், பழியைத் தூக்கி கணேசன் மீது போட்டிருக்கின்றார்.

ஒரு மாநிலத் தலைவரான கணேசன் எப்படி ஒரு மத்திய செயலவை உறுப்பினரை – அதுவும் தனது இன்னொரு மாநிலத்திலிருந்து வந்திருக்கும் ஒரு மத்திய செயலவை உறுப்பினரை – தடுத்து நிறுத்த முடியும்? அதனை தேசியத் தலைவர்தானே செய்திருக்க வேண்டும் என்ற கேள்வியையும் பேராக் மஇகா தலைவர்கள் முன் வைத்துள்ளனர்.

பேராக் மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் தனது தலைமைக்கு மோசமான களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், அதிலிருந்து திசை மாற்றும் விதமாகத்தான், பழனிவேல் கணேசனை நீக்கி, தனக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகளின் கவனத்தை வேறுபக்கம் திருப்ப முயற்சிக்கின்றார் என்பது தெளிவாகத் தெரிவதாக, பேராக் மாநில மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாவம் ஓரிடம்! பழி ஓரிடம்!