Home நாடு “ஒரே ஒரு பெயரை மட்டும் பரிந்துரை செய்யுங்கள்” – பாஸ் கட்சிக்கு அன்வார் கோரிக்கை

“ஒரே ஒரு பெயரை மட்டும் பரிந்துரை செய்யுங்கள்” – பாஸ் கட்சிக்கு அன்வார் கோரிக்கை

518
0
SHARE
Ad

anwarகோலாலம்பூர், ஆகஸ்ட் 28 – சிலாங்கூர் சுல்தான் கேட்டுக் கொண்டதன் படி மந்திரி பெசார் பதவிக்கு பாஸ் 3 பிகேஆர் உறுப்பினர்களின் பெயரை பரிந்துரைக்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், பக்காத்தான் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்று கூறியுள்ளது.

எனினும், பக்காத்தான் தலைமை முடிவு செய்தது போல் ஒரே ஒரு பெயரை மட்டும் பரிந்துரைக்குமாறு அக்கட்சியிடம், எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், “பாஸ் ஒருவேளை மூன்று பெயர்களை அரண்மனையில் சமர்ப்பித்தாலும் பக்காத்தான் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை.  பக்காத்தானின் கூட்டணிக் கட்சிகளான பிகேஆர், ஜசெக, பாஸ் ஆகிய மூன்றும், ஒருவருக்கொருவர் எடுக்கும் முடிவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். எனினும் முடிவுகளில் மாற்றம் இருந்தால் வேண்டுகோள் விடுக்கலாம். கடந்த ஆகஸ்ட் 17 -ம் தேதி மூன்று கட்சிகளின் தலைவர்களை வைத்து எடுக்கப்பட்ட முடிவில் பக்காத்தான் உறுதியாக உள்ளது” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த ஆகஸ்ட் 17 -ம் தேதி எடுக்கப்பட்ட முடிவில், பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயிலை மந்திரி பெசாராக முன்மொழிய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இதனிடையே, மந்திரி பெசாராக வான் அசிசாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டத்தை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் என்று பாஸ் கட்சிக்கு அன்வார் நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

“பெண் ஒருவர் மந்திரி பெசார் ஆவதை பாஸ் கட்சி விரும்பவில்லையா? அப்படி ஒன்று நடந்தால், பக்காத்தான் தலைமை எடுத்த முடிவை நாம் ஒற்றுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்ற களங்கம் பக்காத்தான் வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்டுவிடும்” என்றும் அன்வார் கூறியுள்ளார்.

எனினும், “பக்காத்தான் பிளவு பட இது ஒரு காரணமாக இருந்து விடக்கூடாது. நாம் கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்க செப்டம்பர் 3 -ம் தேதி வரை நாள் இருக்கின்றது” என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.