கோலாலம்பூர், ஆகஸ்ட் 29 – எம்எச்17 பேரிடரில் பலியான மலேசியர்களில் மேலும் 9 பேரின் சடலங்கள் வரும் செப்டம்பர் 2-ம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
விமான நிலையத்தில் சடலங்கள் கொண்டு வரப்பட்டவுடன் இராணுவ மரியாதை செய்வதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.
இது குறித்து ஆயுதப் படை தலைவர் தலைவர் டான்ஸ்ரீ சுல்கிப்ளி முகமட் சின் கூறுகையில், “9 பேரின் சடலங்கள் செப்டம்பர் 2-ம் தேதி கொண்டு வரப்படும். எனினும் எண்ணிக்கையில் கடைசி நேர மாறுதல்கள் இருக்கலாம். இறுதி எண்ணிக்கை வரும் செப்டம்பர் 1 -ம் தேதி தான் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த 9 பேரின் சடலங்களில் இருவர் வெளிநாட்டினர் என்றும், குழந்தையின் சடலம் ஒன்றும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22), எம்எச்17 பேரிடரில் பலியான 20 மலேசியர்களின் சடலங்கள் கேஎல்ஐஏ விமான நிலையத்திற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு நாடு முழுவதும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) மேலும் 3 சடலங்கள் கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.