பத்துமலை, ஆகஸ்ட் 29 – ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் நிலத்தை விற்க அக்கோயிலின் நிர்வாகமும் அதன் தலைவர் ஆர்.நடராஜாவும் ஈடுபட்டுள்ளனர் எனக் கூறி பல எதிர்க்கட்சித் தலைவர்களும், அரசு சாரா இயக்கங்களின் பொறுப்பாளர்களும் நேற்று பத்துமலை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கோவிலுக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை 250 மில்லியனுக்கு சீனர் ஒருவருக்கு விற்கும் முயற்சியில் அக்கோயிலின் நிர்வாகம் இறங்கியுள்ளது என்று எங்களுக்கு தகவல் கிடைத்தது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகையால், அதைத் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய இங்கு வந்துள்ளோம் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் கூறியுள்ளார்.
இந்தியர்கள் நில உரிமைக்காக பாடுபடும் இச்சமயத்தில், நமக்கென சொத்தாக உள்ள நிலத்தை விற்க கண்டிப்பாக விடமாட்டோம் என மேலும் அவர் கூறினார்.
இது சம்பந்தமாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் தர விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல எதிர்க்கட்சி ஆதரவாளர்களும், அரசு சாரா இயக்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.