Home நாடு “உரிமை” கட்சி இராமசாமி தலைமையில் தொடக்கம் கண்டது

“உரிமை” கட்சி இராமசாமி தலைமையில் தொடக்கம் கண்டது

962
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி பேராசிரியர் பி.இராமசாமியின் ‘உரிமை’ கட்சியின் தொடக்க விழா,  கோலாலம்பூர் ஜாலான் ஹாங் கஸ்தூரியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.

தொடக்க விழா நிகழ்ச்சியில் உரிமை கட்சியின் அமைப்புக் குழு உறுப்பினர்களான பாகான் டாலாம் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் சதீஸ் முனியாண்டி, செபராங் பிறை நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் டேவிட் மார்ஷல், சபாய் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் காமாட்சி துரைராஜூ, கிருஷ்ணசாமி, சரவணன் ஆகியோர் உரையாற்றினர்.

இறுதி நேரத்தில் உரிமை கட்சியின் தொடக்க விழா நடைபெற மண்டபத்தை இலவசமாகக் கொடுத்துதவிய ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவுக்கு பேராசிரியர் இராமசாமியும் உரையாற்றிய மற்ற தலைவர்களும் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

உரிமை கட்சியின் தொடக்கம் முக்கியமான வரலாற்றுபூர்வ தேதிகளின் காலகட்டத்தில் நடைபெறுகிறது. நேற்று நவம்பர் 25-ஆம் தேதிதான் 2007-ஆம் ஆண்டில் ஹிண்ட்ராப் ஏற்பாட்டிலான மாபெரும் வீதி ஆர்ப்பாட்டத்தில் இந்தியர்கள் ஒன்று திரண்டு கலந்து கொண்டனர்.

இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் மாவீரர் பிரபாகரனின் பிறந்த நாளாகும். நாளை நவம்பர் 27, இலங்கைத் தமிழர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் மாவீரர்கள் தினமாகும்.

1946-ஆம் ஆண்டில் நம் நாட்டில் இந்திய சமுதாயத்தின் உரிமைப் போராட்டத்திற்காகத் தொடங்கப்பட்ட மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா) அரசியல் கட்சி எந்த இடத்தில் தொடங்கப்பட்டதோ அதே ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வளாகத்தில்தான் இன்று ‘உரிமை’ கட்சியும் தொடங்கப்பட்டது.

உரிமை கட்சியின் அங்கீகாரம் சங்கப் பதிவிலாகாவில் கிடைப்பதற்கு சுமார் 6 மாதம் காலம் முதல் 1 வருடம் வரை ஆகும் என்றும் அதுவரை ‘உரிமை’ ஓர் இயக்கமாக செயல்பட்டு வரும் என சதீஸ் முனியாண்டி தனதுரையில் தெரிவித்தார்.