நியூயார்க், ஆகஸ்ட் 29 – ஹாலிவுட்டின் ‘கோல்டன் ஜோடி’ என்று அழைக்கப்படும் ஏஞ்சலினா-பிராட்பிட் தம்பதியர் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று பிரான்சின் சட்டு மிரவேல் பகுதியின் சிறிய தேவாலயம் ஒன்றில் தனிப்பட்டமுறையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
குடும்பத்தினரும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்ட இந்தத் திருமண விழாவின் அனுமதி ஒன்றினை அவர்கள் ஏற்கனவே கலிபோர்னிய மாகாண நீதிபதி ஒருரிடம் பெற்றிருந்தனர். இந்த நீதிபதி முன்னிலையில் இந்தத் திருமணம் நடந்தேறியுள்ளது.
இந்தத் திருமணத்தில் இந்தத் தம்பதியினரின் ஆறு குழந்தைகளும் பங்கேற்றனர். அவர்களது மகன்கள் மாடோக்ஸ் மற்றும் பக்ஸ் உடன்வர, மகள்கள் சஹாராவும், விவியேன்னும் பூக்கள் தூவ, ஷிலோவும், நாக்சும் மோதிரங்களை எடுத்துத்தர இவர்களின் திருமணம் இனிதே நடந்தேறியதாக அவர்களது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழந்தைகளில் மூன்று பேர் ஏஞ்சலினாவால் தத்தெடுக்கப்பட்ட பொருளாதார நிலையில் பின்தங்கிய நாட்டவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த ஆண்டு மார்பகப் புற்றுநோய்க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறுவை சிகிச்சை செய்துகொண்டதன் மூலமும் ஏஞ்சலினா பத்திரிகைகளால் பரபரப்பாகப் பேசப்பட்டார்.
இதுமட்டுமின்றி போர்க்கால சமயங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளை எதிர்க்கும் சர்வதேச சமூகத் தூதராகவும் இவர் செயல்பட்டு வருகின்றார்.