ஹாங்காங், செப்டம்பர் 2 – சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் சுதந்திரமான ஜனநாயக தேர்தலை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இங்கிலாந்தின் வசம் இருந்த ஹாங்காங், கடந்த 1997-ம் ஆண்டு சீனாவுடன் இணைந்தது. ஒரு நாடு இரு ஆட்சி முறை என்ற அடிப்படையில் ஜனநாயக அரசு ஹாங்காங்கில் நடைபெறுவதுபோல் வெளித்தோற்றம் காட்டப்பட்டாலும், சீனா தனது முழு அதிகாரத்தை ஹாங்காங்கின் அனைத்து அரசியல் அமைப்புகளிலும் செலுத்தி வருகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் 2017-ம் ஆண்டு ஹாங்காங்கில் எவ்வித தலையீடுகளும் இன்றி ஜனநாயகம் நடைபெற வேண்டும் என ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் அவர்களின் இந்த கோரிக்கையை மறுத்துள்ள சீனா இரண்டு அல்லது மூன்று வேட்பாளர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என அறிவித்துள்ளது. இதன் காரணமாக எதிர்த்தரப்பினர் இந்த தேர்தலில் பங்கு பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்றாக மாறி உள்ளது.
சீனாவின் இந்த அதிகாரப்போக்கினை எதிர்க்கும் நோக்கில் ‘ஆக்குபை சென்ட்ரல்’ என்ற இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் நகரின் முக்கிய மத்திய வர்த்தகத் தொடர்புகளைத் தடை செய்யும் விதமான ஒரு பிரச்சாரத்தைத் துவங்குவதற்கான முன்னோட்டமாக ஒரு சிறிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது பற்றி போராட்டக்காரர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பேச்சுவார்த்தைக்கான அனைத்து வாய்ப்புகளும் முடிந்துவிட்டன. இனி மத்திய அலுவலகக் கட்டிடங்களைக் கைப்பற்றுவது மட்டுமே சாத்தியம்” என்று அறிவித்துள்ளனர்.