கோலாலம்பூர், செப்டம்பர் 2 – ஆப்பிள் நிறுவனம் இணைய வர்த்தகம் மற்றும் வர்த்தக ரீதியிலான பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்டவற்றை செல்பேசிகள் வழியாக நடைபெறச் செய்யும் புதிய வசதிகளை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஆரூடங்கள் கூறுகின்றன.
பணப் பரிமாற்றங்களில் பெரும் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இந்த திட்டம் தற்சமயம் ‘மொபைல் வாலெட்’ (Mobile Wallet) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இணைய மற்றும் நேரடி வர்த்தகம் உள்ளிட்ட அனைத்திலும் தற்போது ‘கடன் அட்டைகள்’ (Credit Cards) மற்றும் ‘பற்று அட்டைகள்’ (Debit Cards) பெரும் பங்கு வகிக்கின்றன. அனைத்து வங்கிகளும் ‘விசா’ (Visa) மற்றும் ‘மாஸ்டர்கார்ட்’ (Mastercard) உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. பெரும்பான்மையான பயனர்கள் நேரடி பணப்பரிமாற்றம் செய்யாமல், தங்கள் வர்த்தகத்தை இந்த அட்டைகள் மூலமாகவே செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வசதிகளை மேலும் எளிதானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்ற ஆப்பிள் முயன்று வருகின்றது. திறன்பேசிகளில் உள்ள கைரேகை ஸ்கேன் செய்யும் வசதியின் மூலம் பணப்பரிமாற்றம் நடைபெறச் செய்ய ஆப்பிள் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக ஆப்பிள் வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்காக தற்போது விசா, மாஸ்டர்கார்ட் போன்ற வசதிகளை கொடுக்கும் வங்கிகளுடன் ஆப்பிள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் இந்த செயல்திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகின்றது.
ஒரு சில தொழில்நுட்ப பத்திரிகைகள் எதிர் வரும் செப்டம்பர் 9-ம் தேதி, இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை ஆப்பிள் வெளியிடலாம் என்று கூறுகின்றன.