பங்காளதேச நாட்டில் வங்கமொழியிலும், ஆங்கிலத்திலும் அச்சு, இணையம் என பல்வேறு தளங்களில் இயங்கும் தகவல் ஊடகம் பிடி நியூஸ்24.கோம் (bdnews24.com).
பிடி நியூஸ் தகவல் ஊடகத்தின் திறன் பேசி செயலியை (Smart Phone App) முழுக்க முழுக்க மலேசியாவின் செல்லியல் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனமே வடிவமைத்துத் தந்துள்ளது என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.
அதோடு தற்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் செல்லியல் திறன்பேசி செயலியின் தொழில் நுட்ப அடிப்படையிலேயே இந்த வங்கதேச தகவல் ஊடகத்தின் செயலியும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க மற்றோர் அம்சமாகும்.
முத்து நெடுமாறனின் வடிவமைப்பு
கூகுளின் அண்ட்ரோய்ட், ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் ஆகிய தளங்களில் சிறந்த தொழில் நுட்ப வசதிகளோடு இந்த வங்கதேச செய்தி செயலியில் அதன் வாசகர்கள், பதிவிறக்கம் செய்த பின்னர் உலா வரலாம்.
வரி வடிவச் செய்திகளோடு, ஒளி வடிவ (காணொளி-வீடியோ) செய்திகளையும் இந்தச் செயலி தாங்கி வரும். வாசகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும் வகையில் இந்தச் செயலி பல்வேறு தொழில் நுட்ப வசதிகளோடும், இரு மொழிகளிலும் (வங்காள மொழி – ஆங்கிலம்) பயனர்கள் அவரவர்களுக்குத் தேவையான செய்திகளைத் தேர்ந்தெடுத்துப் பெற்றுக் கொள்ளும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
வங்காளதேசத்திலிருந்து பணியாளர்களாக, உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பணிபுரிந்து வரும் மில்லியன் கணக்கான வங்காள தேச தொழிலாளர்களுக்கு இந்த திறன்பேசி செயலி மூலமான செய்தித் தளம் அவர்களை உடனுக்குடன் ஒரே நேரத்தில் இணைக்கும் பாலமாக திகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த செய்தித் தள சேவை தற்போது இலவசமாகவே வழங்கப்படுகின்றது.
செல்லியலின் வடிவமும் தொழில் நுட்பமும்
செல்லியல் செயலியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் செய்திகளைத் தேடிப் பெறும் வசதியைப் போலவே இந்த செயலியிலும் ஆங்கில, வங்காள சொற்களைக் கொண்டே பழைய செய்திகளைத் தேடிப் பெறுவதற்கான வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
செல்லியல் தொழில்நுட்பத்தின் இந்த புதிய வளர்ச்சியைப் பற்றிக் குறிப்பிடுகையில் பிடிநியூஸ்24.கோம் செயலியில் மேலும் சில தரமான, தேவைக்கேற்றத் தொழில்நுட்ப மேம்பாடுகளைத் தாம் தற்போது வடிவமைத்து வருவதாகவும், அவை இம்மாதத்திற்குள் முழுமையாக செயல்வடிவம் பெற்று பயன்பாட்டிற்கு வரும் என்றும் முத்து நெடுமாறன் கூறினார்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்குதளத்தில் உள்ள வங்காள மொழி எழுத்துருக்களை வடிவமைத்தவரும் முத்து நெடுமாறன்தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
“செல்லினம்” போன்றே அண்ட்ரோய்ட் கருவிகளில் வங்காள மொழியில் எழுதுவதற்கு ‘செல்லிபி’ (Sellipi) என்ற செயலியையும் முத்து நெடுமாறன் ஏற்கனவே வடிவமைத்துள்ளார்.