பெட்டாலிங் ஜெயா, செப். 4 – சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பிகேஆர் கட்சித் தலைவர் வான் அசிசாவின் பெயரை சிலாங்கூர் அரண்மனை நிராகரிக்கவில்லை என்று குறிப்பிட்டு ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கையை, பிகேஆர் கட்சி உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது.
இந்த அறிக்கையை வெளியிட்ட 20 நிமிடங்களில், அதை வெளியிட வேண்டாம் என்று அனைத்து ஊடகங்களையும் தொடர்பு கொண்டு பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் (படம்) கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக அவரைத் தொடர்பு கொண்டபோது, அறிக்கையில் உள்ள குறிப்பிட்ட சில தகவல்களை மாற்ற வேண்டியுள்ளது என்றும், அதன் காரணமாகவே அறிக்கையை திரும்பப் பெறுவதாகவும் குறிப்பிட்ட அவர், புதிய அறிக்கை ஒன்று வியாழக்கிழமை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
குறிப்பிட்ட அந்த அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று பல்வேறு ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் மற்றும் செல்பேசி குறுந்தகவலில் பிகேஆர் தகவல் தொடர்புப் பிரிவு இயக்குநர் ஃபாமி பட்சில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மந்திரி பெசார் பதவி தொடர்பான பரிசீலனைக்கு சுல்தானிடம் இரு பெயர்களுக்கும் மேல் பரிந்துரைக்க வேண்டும் என்பதை நினைவூட்டி, அரண்மனையில் இருந்து பிகேஆர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்தே பிகேஆர் தலைமை குறிப்பிட்ட அந்த அறிக்கையை வெளியிட்டது.
கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி வான் அசிசாவின் பெயரை மட்டுமே மந்திரி பெசார் பதவிக்குப் பரிந்துரைத்து அளிக்கப்பட்ட கடிதத்தை அரண்மனை அங்கீகரித்து இருப்பதற்காக அந்த அறிக்கையில் பிகேஆர் நன்றி தெரிவித்துள்ளது.
அரண்மனையில் இருந்து வந்துள்ள கடிதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, மந்திரி பெசார் பதவிக்கு வான் அசிசா பெயர் பரிந்துரைக்கப்பட்டதை அரண்மனை நிராகரிக்கவில்லை என புரிந்து கொள்ள முடிவதாகவும் சைபுடின் மேலும் கூறியுள்ளார்.