குவாந்தான், செப். 5 – சுற்றுலா தளமான தியோமான் தீவின் பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுப்பயணி பிலிப் லௌரனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அவரைக் காணவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் 2.16 மணிக்கு மீட்புப் படையினர் அவரது சடலத்தைக் கண்டுபிடித்தனர்.
24 வயதான பிலிப் லௌரனின் சடலம் அவர் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டதாக ரோம்பின் மாவட்ட காவல்துறை தலைவர் டிஎஸ்பி ஸோஹாரி ஜஹாயா தெரிவித்தார்.
“பிலிப் லௌரனின் நண்பர் ஒருவர் அவரது சடலத்தை அடையாளம் கண்டுள்ளார். இதையடுத்து ரொம்பின் மருத்துவமனைக்கு அச்சடலம் அனுப்பி வைக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை நடைபெறும்,” என்றும் அவர் கூறினார்.
முன்னதாக பெர்ஜாயா ரிசோர்ட்ஸ் விடுதியில் தங்கியிருந்த பிலிப் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் காணாமல் போனதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.