கோலாலம்பூர், செப்டம்பர் 5 – அண்ட்ரோய்ட் இயங்குதளத்தில் இயங்கி வரும் ‘செல்லியல்’ செயலியில் மேலும் கூடுதலான தொழில் நுட்ப அம்சங்கள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மேம்பாடுகளில் முக்கியமானது, பயனீட்டாளர்களுக்கு உடனுக்குடன் குறுந்தகவல் வடிவில் வந்து சேரும் புதிய செய்திகள் சரியாக பதிவிறக்கம் செய்யப்படுவதாகும்.
முன்பெல்லாம் புதிய செய்திகள் குறுந்தகவலாக திறன்பேசித் திரையில் தெரியும்போது அதனை அழுத்தினால், சில சமயங்களில் வேறு ஒரு செய்திக்கு செல்லும் நிலைமை இருந்தது.
தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள செல்லியல் பதிப்பில் அந்த வழு (bug) நீக்கப்பட்டுள்ளது).
அதுமட்டுமில்லாமல், புதிய செல்லியல் பதிப்பில் திறன்பேசியை சத்தம் கேட்காவண்ணம், மௌனமான வைத்திருக்கும் (Silent mode) மற்றும் அதிர்வது போன்ற இயக்கத்தில் (vibration mode) வைத்திருப்பவர்களின் தேவைக்கேற்ப சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
உதாரணமாக, திறன் பேசியை மௌனமான இயக்கத்தில் வைத்திருக்கும் நேரங்களில், செல்லியலின் புதிய செய்திகள் குறுந்தகவல் வடிவில் வந்து சேரும்போது எந்தவித சத்தமோ, ஒலிக் குறிப்போ (tone) அந்த புதிய செய்தி திரையில் தோன்றும்போது கேட்காது.
பயனீட்டாளர்கள் தங்களின் திறன்பேசியை அதிர்வது போன்ற இயக்கத்தில் வைத்திருந்தால், திறன்பேசித் திரையில், குறுந்தகவல் வடிவில் செல்லியலின் புதிய செய்தி வந்து சேரும்போது, சாதாரண மற்ற குறுந்தகவல்கள் வந்தால் எப்படிப்பட்ட அதிர்வது போன்ற ஒலிக்குறிப்பு கேட்குமோ அதே வகையிலான ஒலிக் குறிப்பு கேட்கும்.
ஆனால், சாதாரணமான நிலையில் திறன்பேசி வைக்கப்படிருந்தால், செல்லியலின் புதிய செய்தி திறன்பேசித் திரையை வந்தடையும்போது காதுக்கினிய ஒரு புதிய வகையிலான ஒலிக் குறிப்பு கேட்கும்.
ஆச்சரியத்தைத் தரும் இந்த ஒலிக் குறிப்பு என்ன என்பதை வாசகர்கள் அனுபவபூர்வமாக உணர வேண்டும்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், அண்ட்ரோய்ட் தளத்திலுள்ள கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play store) உள்ள செல்லியலின் செயலியில் காணப்படும் ஆகக் கடைசியான மேம்படுத்தப்பட்ட திருத்தங்களை (updates) பதிவிறக்கம் செய்ய வேண்டும்! அவ்வளவுதான்!