கனோ, செப்டம்பர் 8 – நைஜீரியாவில் போகொ ஹாரம் தீவிரவாதிகளின் அட்டூழியத்தால், நாட்டை விட்டு மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேறி வருவதாகக் கூறப்படுகின்றது.
நைஜீரியாவில் செயல்பட்டு வரும் போகொ ஹாரம் தீவிரவாத அமைப்பு, அங்கு இஸ்லாமிய ஆட்சியை நிறுவ பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றது.
மேற்கத்திய கல்வித் தடை என்று கூறி நூற்றுக்கணக்கான மாணவிகளை கடத்திச்சென்று அவர்களின் கல்வியை அந்த அமைப்பு தடை செய்தது.
பயங்கர ஆயுதங்களை கொண்டு மக்களை மிரட்டி வரும் அந்த இயக்கத்தினரைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகின்றது.
நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அடமாவா மாநிலத்தின் பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் அந்த அமைப்பினர் கொண்டு வந்துள்ளனர். மடகாலி, குலாக், மிசிகா போன்ற நகரங்களும் இவர்களின் பிடிக்குள் உள்ளன.
மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தப் பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் அருகில் உள்ள மலைப்பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
மேலும் அந்தப் பகுதியில் உள்ள உள்ளூர் அரசாங்கத் தலைமையகமான குலாக் நகரம் முற்றிலும் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
எனினும் இது குறித்து பாதுகாப்பு தலைமையகத்தின் தகவல் தொடர்பாளரான மேஜர் ஜெனரல் கிரிஸ் ஒலுகோலடே எந்த ஒரு கருத்தினையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.