நியூயார்க், செப்டம்பர் 8 – அமெரிக்காவின் அரிசோனா மற்றும் டெலாவேர் மாகாணங்களில் அதிகமானோர் பின்பற்றும் மதங்களில் இந்து மதம் இரண்டாம் இடத்தில் இருப்பதாக அமெரிக்க மத அமைப்புகள் புள்ளிவிவர நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்துப் பிரமுகர் ராஜன் செட் நிவேடாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க வாழ் இந்து சமூகத்தின் வெற்றிக்காக தமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் அதிகம் கல்வியறிவு பெற்ற, வருமான அடிப்படையில் இரண்டாவது இடம் பிடித்த, மிகக் குறைவான விவகாரத்துகள் நிகழக்கூடிய மத அமைப்பாக இந்து மதம் விளங்குவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்துலக இந்து சொசைட்டியின் தலைவராக உள்ள ராஜன் செட் (படம்), இந்துக்கள் உள்ளத் தூய்மையுடன் இருக்க வேண்டும் என்றும், பேராசையை தவிர்த்து என்றும் கடவுளுடன் ஐக்கியமாகி இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
வேதங்கள் மற்றும் புனித நூல்களை நன்கு கற்றுணர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், குழந்தைகளுக்கும் இளையர்களுக்கும் ஆன்மீகத்தின்
மீதான ஈர்ப்பை அதிகரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
“இந்து மதம் விவரிக்கக் கூடிய ஆன்மீகக் கூறுகளையும், அதன் பழம்பெரும் பாரம்பரியத்தையும் வருங்கால சந்ததியினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நமது சமூகம் நுகர்கோர் சமூகமாகிவிட்ட நிலையில், பல்வேறு கவனச் சிதறல்களுக்கு மத்தியில் நமது குடும்பங்கள் அனைத்தும் இத்திசையை நோக்கி பயணிக்க முயற்சி மேற்கொள்ளும் என நம்புகிறேன். மோட்சத்தை அடைவதே இந்து மதத்தின் நோக்கம். அதை நோக்கி நடைபோட வேண்டும்,” என ராஜன் செட் மேலும் கூறியுள்ளார்.
உலகின் மிகப் பழமை வாய்ந்த, மூன்றாவது பெரிய மதமாக உள்ளது இந்து மதம். உலகெங்கிலும் இம்மதத்தை பின்பற்றுகிறவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு பில்லியன் ஆகும். அமெரிக்காவில் 3 மில்லியன் இந்துக்கள் உள்ளனர்.