கொழும்பு, செப்டம்பர் 8 – மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு, இலங்கை அரசு இன்று ஐ.நா.மனித உரிமை ஆணையத்திடம் விளக்கம் அளிக்கின்றது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக 2009-ம் ஆண்டு நடந்த இறுதிகட்டப் போரில், இலங்கை இராணுவம் சரணடைந்த விடுதலைப்புலிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள், மனித உரிமைக்கு எதிராக இருந்ததாக அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 27-வது கூட்டம் ஜெனீவாவில் இன்று தொடங்குகின்றது. அந்த கூட்டத்தில், இலங்கை மீதான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கைத் தூதர் ரவிநாத ஆர்யசிங்கா விளக்கம் அளிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகள் நிறைவேற்றிய தீர்மானத்திற்குப் பிறகு, ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டம் நடைபெற இருப்பது இதுவே முதல் முறை. ஐ.நா. மனித உரிமை அமைப்பின் ஆணையர் நவநீதம் பிள்ளையின் பதவிக் காலம் முடிந்து புதிய தலைவராக செயித் அல் ஹுசைன் பொறுப்பேற்றுள்ளார்.
அவரது தலைமையின் கீழ் இன்று முதல் கூட்டம் நடைப்பெற இருப்பதால், உலக நாடுகளின் கவன ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் மீது திரும்பி உள்ளது.
இலங்கை விவகாரம் குறித்து புதிய ஆணையர் செயித் அல் ஹுசைன் கூறியிருப்பதாவது:- “இலங்கையில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அந்நாட்டு அரசு ஒத்துழைப்பு கொடுப்பதை நான் வரவேற்கிறேன்.
எனினும் இலங்கையில் மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருப்பதாக கூறப்படும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன” என்று அவர் கூறியுள்ளார்.