கோலாலம்பூர், செப்டம்பர் 9 – சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரம் நாட்டின் சட்ட வல்லுநர்களிடையே பலத்த சர்ச்சைகளையும் மாற்றுக் கருத்துக்களையும் ஏற்படுத்தி வருகின்றது.
சுல்தான்களுக்கு எந்த அளவுக்கு அதிகாரம் இருக்கின்றது என்பது குறித்து மலாயாப் பல்கலைக்கழக பேராசிரியர் அஸ்மி ஷாரோம் தெரிவித்த கருத்தினால் அவர் மீது தேச நிந்தனை குற்றச்சாட்டை சுமத்தப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
மந்திரி பெசார் என்ற பதவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் முடிவா அல்லது சுல்தானின் தனிப்பட்ட அதிகாரமா என்பதுதான் தற்போது மையம் கொண்டிருக்கும் சர்ச்சைகளின் சாராம்சமாகும்.
இது குறித்து கருத்துரைத்துரைக்கும்போது, ஒருவர் மந்திரி பெசார் ஆவதற்கு அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றவரா என்பதுதான் சரியான தகுதி ஆகும் என்று அரசியலமைப்புச் சட்ட வல்லுநர் அப்துல் அஸிஸ் பாரி (படம்) தெரிவித்துள்ளார்.
இதில் ஆட்சியாளரின் தனிப்பட்ட விருப்பத்திற்கு இடமில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஒருவர் மந்திரி பெசார், முதல்வர் அல்லது பிரதமர் ஆவதற்கு பெரும்பான்மை ஆதரவு என்பதே ஒரு தகுதி தான்.
ஆணா, பெண்ணா, கல்வித் தகுதி என்பதற்கும், ஆட்சியாளரின் விருப்பத்திற்கும்கூட அந்த முன்னுரிமை கிடையாது என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
பெரும்பான்மை இருக்கும் இடத்தில் மந்திரி பெசார் மலாய்க்காரராக, முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையைக் கூட ஒதுக்கி வைக்க முடியும் என்று அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.
பக்காத்தான் ராயாட் எனப்படும் மக்கள் கூட்டணி கட்சிகளின் பெயர்ப் பட்டியலில் இல்லாத ஒருவரைக்கூட மாநில மந்திரி பெசாராக சுல்தான் நியமனம் செய்ய முடியும் என்று கூறியிருக்கும் சிலாங்கூர் அரண்மனை அறிக்கை குறித்து கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இதற்கிடையில், பிரதமராக ஒருவர் பெயர் குறிப்பிடப்படும்போது, நாட்டின் மாமன்னர் எப்போதாவது மூன்று பெயர்களைக் கொடுங்கள் கேட்டிருக்கின்றாரா என்றும் ஒருசிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சி முன்மொழிபவரைத்தான் சுல்தான் மந்திரி பெசாராக நியமிக்க வேண்டும். அப்படியே சுல்தான் யாரை நியமித்தாலும் மீண்டும் சட்டமன்றம் கூடும்போது, அவ்வாறு நியமிக்கப்பட்ட மந்திரி பெசார் தனது பெரும்பான்மையை முதல் சட்டமன்றக் கூட்டத்தில் நிரூபித்தாக வேண்டும் என்பதும் ஜனநாயக மரபு.
எனவே, சுல்தான் தனது இஷ்டத்திற்கு ஒருவரை நியமித்து விட்டாலும், அவர் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் இயல்பாகவே மந்திரி பெசார் பதவியை இழந்து விடுவார் என்பது அரசியலமைப்பு சட்டத்தின் மற்றொரு அம்சமாகும்.