செப்டம்பர் 10 – ஒரு கைத்தொலைபேசி – நவீனங்களை உள்ளடக்கிய திறன் பேசி – இந்த அளவுக்கு அகில உலக அளவில் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்த முடியுமா என தகவல் ஊடகங்கள் – தொழில் நுட்ப வல்லுநர்கள் வியக்கும் வண்ணம் அமைந்திருக்கின்றது இன்று நிகழவிருக்கும் ஆப்பிள் நிறுனத்தின் அறிமுக விழா.
அவர்கள் என்ன அறிமுகம் செய்யப் போகின்றார்கள் என்பது குறித்து இதுவரை எந்தவித அதிகாரபூர்வ தகவலும் இல்லை. அதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் பாரம்பரிய சிறப்பு.
ஆனால், அவர்கள் அறிமுகப்படுத்தப் போவது அது ஐபோன் 6 ஆகத்தான் இருக்கும் என்பதும், அதோடு சேர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் சில புதிய தொழில் நுட்பங்களும் அறிமுகம் காணும் என்பது தகவல் ஊடகங்களின் எதிர்பார்ப்பு.
அறிமுக விழாவிற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே, நியூயார்க்கில் உள்ள ஆப்பிள் நிறுவன விற்பனை மையத்தில் மக்கள் ஐபோன் 6ஐ வாங்குவதற்கு வரிசையில் நிற்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஆப்பிள் நிறுவன அறிமுக விழா நடைபெறும் கலிபோர்னியா மாநிலத்தின் குப்பர்ட்டினோ நகரில் உள்ள ஆப்பிள் நிறுவன ஃபிளிண்ட் சென்டருக்குள், அறிமுக விழாவிற்கு முன்னதாக குழுமத் தொடங்கும் தகவல் ஊடகப் பிரதிநிதிகள்..
ஆப்பிள் நிறுவனக் கட்டிடத்தின் வெளியே நிர்மாணிக்கப்பட்டு மூடப்பட்டிருக்கும் வெள்ளைநிற கட்டுமானம். இது என்னவென்று இதுவரை யாருக்கும் காட்டப்படவில்லை.
இன்று முதல் எங்கு பார்த்தாலும் – எங்கு திரும்பினாலும் – எங்கே கேட்டாலும் – இனி கொஞ்ச நாட்களுக்கு ஒரே ஐபோன் 6 புராணமாகத்தான் இருக்கும்.