ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 60 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் 200 பேர் பலியாகி உள்ளனர். பல லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
நாட்டின் முப்படைகளும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிவாரண உதவியை அறிவித்தது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு ரூ 5 கோடி நிதி உதவி வழங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதேபோல் பல மாநில அரசுகளும் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக ரூ10 லட்சம் வழங்குவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு இத்தொகை வழங்கப்படும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.