சென்னை, செப்டம்பர் 10 – படத்தில் நடிப்பதற்கு முன்பணமாக கொடுத்த ரூ.40 லட்சத்தை தர மறுப்பதாக நடிகை காஜல் அகர்வால் மீது நடிகரும், பட அதிபருமான உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து கதாநாயகனாக நடித்து வரும் புதிய படம் ‘நண்பேன்டா’. இதில், கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். நயன்தாராவை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு, இந்த படத்தில் காஜல் அகர்வால் நடிப்பதாக இருந்தது.
இதற்காக அவருக்கு ரூ.1 கோடியே 40 லட்சம் சம்பளமாக பேசப்பட்டது. அதில், ரூ.40 லட்சத்தை காஜல் அகர்வாலுக்கு முன்பணமாக கொடுக்கப்பட்டது.
காஜல் அகர்வால் தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடிப்பதால், ‘நண்பேன்டா’ படத்தில் அவரால் உடனடியாக நடித்துக் (கால்ஷீட்) கொடுக்க முடியவில்லை.
இரண்டு மாதங்கள் காத்திருந்த உதயநிதி, ‘நண்பேன்டா’ படத்தில் காஜல் அகர்வாலை தவிர்த்து, நயன்தாராவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். உதயநிதி-நயன்தாரா ஜோடியுடன் ‘நண்பேன்டா’ படம் வளர்ந்து இப்போது, முடிவடையும் நிலையில் இருக்கிறது.
இந்நிலையில், காஜல் அகர்வாலிடம் கொடுத்த ரூ.40 லட்சம் முன்பணத்தை உதயநிதி திருப்பிக் கேட்டுள்ளார். காஜல் அகர்வால் பணத்தை திருப்பிக் கொடுக்க சம்மதித்தாலும், அவருடைய தாயார் திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டார்.
‘நண்பேன்டா’ படத்துக்காக தேதிகளை ஒதுக்கி வைத்திருந்ததால், ஜூனியர் என்.டி.ஆர். (தெலுங்கு) படத்தில் காஜல் அகர்வால் நடிக்க முடியாமல் போய் விட்டது. எனவே பணத்தை திருப்பித்தர முடியாது’ என்று காஜல் அகர்வாலின் தாயார் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து காஜல் அகர்வால் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், உதயநிதி புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் விசாரணை நடத்தி வருகிறது.