கோலாலம்பூர், செப்டம்பர் 13 – மலேசியாவின் பிரபல குறும்பட இயக்குநர் விக்கினேஸ் லோகராஜ் அசோகனின் இரண்டாவது குறும்படமான, “நேற்று அவள் இருந்தாள்” என்ற 20 நிமிடக் குறும்படம் இன்று மதியம் 2 மணியளவில் தலைநகர் ஃபினாஸ் -ல் உள்ள திரையரங்கில் பத்திரிகையாளர்கள் மற்றும் சில முக்கியப் பிரமுகர்களுக்காக சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை கதைக் கருவாக வைத்து திகில் மற்றும் திடீர் திருப்பங்களுடன், மிக எதார்த்தமான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விக்கினேஸ்.
இந்த திரைப்படத்தில் ஜி கிரேக் கர்ணன், ஜெயா கணேசன், கிருஷ்னெர்வன் ஹரிகிருஷ்ணன்,மகேசன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை இமேஜினரி கலர் ஸ்டுடியோ மற்றும் தி பேட் கம்பெனி இணைந்து வெளியிட, மிஸ்டா மகேஷ் தயாரித்துள்ளார்.
இப்படத்திற்கு ரவின் மனோகரனின் ஒளிப்பதிவும், வினேஷ் குமாரின் இசையும் பக்கபலம் சேர்த்துள்ளன. ஓவியா பாடல் வரிகள் எழுதியுள்ளார். விறுவிறுப்பான திருப்பங்களின் போது படத்தின் சுவாரஸ்யம் குறைந்து விடாதபடி, குபேன் மகாதேவன் மற்றும் ரவின் மனோகரனின் படத்தொகுப்பு மிக கவனமாகக் கையாளப்பட்டிருக்கின்றது.
இந்த சிறப்புக் காட்சியில் பிரபல நடிகர்களான கே.எஸ் மணியம், ஹரிதாஸ், இயக்குநர் கார்த்திக் ஷமலன், சோமா காந்தன், சரேஷ் டி செவன், தீலீப், ஜெய் கிஷான், விடேஸ் மித்ரா மற்றும் பிரபல பத்திரிகையாளரும், தாய்மொழி தலைமை நிரூபருமான எஸ்பி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகர் ஹரிதாஸ், கே.எஸ்.மணியம், கார்த்திக், இயக்குநர் விக்கினேசின் தாயார் மற்றும் எஸ்.பி சரவணன் ஆகியோர் படம் குறித்து தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
விரைவில் வெளியிடப்படவுள்ள இந்த திரைப்படம் மலேசிய மக்கள் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று… விக்கினேஸ் மற்றும் குழுவினருக்கு செல்லியலின் மனமார்ந்த வாழ்த்துகள்…
– ஃபீனிக்ஸ்தாசன்