Home நாடு நடுவானில் கோளாறு:  இந்தியா சென்ற மாஸ் விமானம் பாதி வழியில் திரும்பியது

நடுவானில் கோளாறு:  இந்தியா சென்ற மாஸ் விமானம் பாதி வழியில் திரும்பியது

473
0
SHARE
Ad

MASகோலாலம்பூர், செப்டம்பர் 14-நடுவானில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, இந்தியா சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பாதி வழியில் மலேசியா திரும்பியது.

மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்களில் அடிக்கடி கோளாறுகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் பயணிகள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு மேலோங்கி நிற்கிறது.

எம்.எச். 370 விமானம் மாயமான பின்னர், எம்.எச். 17 விமானம் உக்ரேன் கிளர்ச்சியாளர்களால் தகர்க்கப்பட்டது. இதற்கிடையில் அண்மையில் பெங்களூரூ சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நடுவானில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீண்டும் கோலாலம்பூர் திரும்பியது.

#TamilSchoolmychoice

இவ்வாறு மலேசிய ஏர்லைன்ஸ் தொடர்பாக அடிக்கடி பரபரப்புச் செய்திகள் வெளியாகும் நிலையில், நேற்றுசனிக்கிழமையும் ஒரு பரபரப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சனிக்கிழமை இரவு 10.20 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்டது எம்.எச்.198 விமானம்.

நேற்று அதிகாலை ஹைதராபாத் சென்றடைந்திருக்க வேண்டிய அந்த விமானம் அதிகாலை 2.01 மணிக்கு மீண்டும் கோலாலம்பூருக்கே திரும்பி வந்தது.

விமான எரிபொருள் வைக்கப்படும் இடத்தில் திடீரென தீப்பிடித்ததே விமானம் தரையிறங்க காரணம் என முதலில் நட்பு ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் இத்தகவலை மறுத்தது.

தானியங்கி விமான இயக்குமுறை (ஆட்டோ பைலட்) அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே விமானம் நடுவானில் திரும்பியதாக அந்நிறுவனம் பின்னர் தெரிவித்தது.

விமானம் தரையிறங்கியதும் பயணிகளும், விமானப் பணியாளர்களும் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேறினர் என்றும், அனைவரும் விமான நிலையத்திற்கு அருகே உள்ள தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் மலேசிய ஏர்லைன்ஸ் மேலும் கூறியுள்ளது.

எம்எச்198டி (MH 198-D) என பெயர் மாற்றம் கொண்ட வழித்தட எண்ணுடன் இன்று நண்பகல் 12 மணிக்கு அதே பயணிகளுடன் மீண்டும் அந்த விமானம் ஹைதராபாத் புறப்பட்டுச் செல்லும் என மாஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.