தோக்கியோ, செப்டம்பர் 16 – இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஜப்பான் நாட்டின் தலைநகர் தோக்கியோவைத் தாக்கியதைத் தொடர்ந்து நகரின் மையப் பகுதியில் உள்ள கட்டிடங்கள் அதிர்ந்தன. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான அந்த நில நடுக்கத்தால், உடனடியாக சுனாமி ஆபத்து இல்லையென்றாலும், நிலநடுக்கத்தின் காரணமாக ஏறத்தாழ ஒரு நிமிடத்திற்கு கட்டிடங்களும் பூமியும் அதிர்ந்தன.
நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான அடையாளத்தைக் காட்டும் வரைபடம்
தோக்கியோவிலிருந்து வடகிழக்கு நோக்கி 44 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாகவும், பூமிக்கு அடியில் சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகியிருக்கலாம் என ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் பல தடவைகள் நிலநடுக்கத்திற்கு உள்ளாவது என்பது ஜப்பான் நாட்டிற்கு வழக்கமான ஒன்றுதான், என்றாலும் கடந்த மார்ச் 2011இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தோடு கூடிய சுனாமியால் அந்நாட்டிற்கு பலத்த சேதம் விளைந்தது.
ரிக்டர் அளவில் 9.0 ஆக பதிவான அந்த நிலநடுக்கத்தால், 18,000 பேர் பலியாகினர் என்பதோடு, உலகின் மோசமான அணுசக்தி நிலைய பேரழிவுகளில் ஒன்றும் ஃபுக்குஷிமாவில் ஏற்பட்டது.
உலகில் ஆண்டுதோறும் ஏற்படும் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் ஐந்தில் ஒரு பகுதி ஜப்பானில்தான் நிகழ்கின்றது.
நிலநடுக்க வரைபடம்: EPA