வாஷிங்டன், செப்டம்பர் 17 – மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரமாக பரவி வரும் தொற்று நோயான எபோலாவைக் கட்டுப்படுத்த 3000 வீரர்கள் அடங்கிய இராணுவ மருத்துவப் படையை அனுப்ப அமெரிக்க அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் தொடங்கி, சியாரா லியோன், கீனியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவிய எபோலா நோய் தாக்குதல் இதுவரை 2,400-க்கும் மேற்பட்டோரை பலி வாங்கி உள்ளது.
மேலும் இந்நோய் இடம் பெயர்தல் மூலமாக மற்ற நாடுகளுக்கும் பரவி வருகின்றது. வளர்ந்த நாடுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதால் அந்நாடுகளில் இந்நோயின் தாக்கம் குறைவாகவே உள்ளது.
ஆனால் பொருளாதார வளர்ச்சி பெறாத ஆப்பிரிக்க நாடுகளின் நிலை, இந்நோய் தாக்குதலால் மிகவும் மோசமடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது காங்கோ நாட்டிலும் இந்த நோய் தாக்குதல் தீவிரமாக பரவியுள்ளதாகக் கூறப்படுவதால் இதனை தடுக்க முடிவு செய்துள்ள மேற்கத்திய நாடுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளில் இறக்கி உள்ளன.
எபோலா நோய்க்கான தடுப்பு மருந்துகளை அமெரிக்கா கண்டறிந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அந்நாடு இதனை தடுக்க 3000 இராணுவ வீரர்கள் அடங்கிய படையை விரைவில் அனுப்ப தீர்மானித்துள்ளது. இந்த படையில் பெரும்பாலானவை இராணுவ மருத்துவக் குழு என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.