Home நாடு எம்எச் 370 விமானி தற்கொலையா? கற்பனையான தகவல் என்கிறது மாஸ்

எம்எச் 370 விமானி தற்கொலையா? கற்பனையான தகவல் என்கிறது மாஸ்

464
0
SHARE
Ad

MAS LOGOகோலாலம்பூர், செப்டம்பர் 17 – மாயமான எம்எச் 370 விமானத்தின் தலைமை விமானி சஹாரியா தற்கொலை செய்து கொள்ளவில்லை என மலேசிய ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. மாயமான எம்எச் 370 விமானத்தின் விமானி தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்றும், அதற்கு முன்னதாக விமானத்தில் பிராண வாயு வினியோகத்தை அவர் துண்டித்திருக்க வேண்டும் என்றும் அண்மையில் செய்தி வெளியானது.

கிவி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவரான இவான் வில்சன் மற்றும் நியூசிலாந்து பத்திரிகையாளர் ஜெஃப் டைலர் இருவரும் இணைந்து எழுதியுள்ள ‘குட்நைட் மலேசியன் 370’ (Goodnight Malaysian 370) என்ற புத்தகத்தில் இத்தகவல் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் இக்கூற்றை மாஸ் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. “இது முழுக்க முழுக்க கற்பனையான செய்தி. அந்தப் புத்தகத்தை எழுதியவர்களும் பதிப்பாளர்களும் தாங்கள் இப்படிக் கூறியதற்கான எந்தவித ஆதாரமும் இன்றி, சுயலாபத்திற்காக இப்படி எழுதியுள்ளனர்,” என்று மலேசிய
ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் இந்த நூலின் ஆசிரியர்களான இவான் வில்சன், டெய்லர் ஆகிய இருவரும் எம்எச் 370 விமானம் தொடர்பான விசாரணையில் ஈடுபடவில்லை என்று குறிப்பிட்டுள்ள மாஸ், இருவரும் தங்களது ஆற்றலுக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்ட கூற்றை கூறியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மாயமான விமானம் தொடர்பில் மலேசியாவின் தலைமையில், மிகவும் வலுவான அனைத்துலக குழுவைக் கொண்டு தேடுதல் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள மாஸ், இந்த நடவடிக்கை தொடர்பில் தவறான, பொய்யான, திசை திருப்பும் தகவல்களை பரபரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கத்  தயங்கப் போவதில்லை என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.