பெய்ஜிங், செப்டம்பர் 19 – ஆப்பிளின் ஐபோன் 6-ஐ சீனாவில் விற்பனை செய்யவதற்கு போடப்பட்ட தடை உத்தரவுகள் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டு வருகின்றன. சீனாவின் நிபந்தனைகளை ஆப்பிள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதாகக் கூறப்படுகின்றது.
எனினும், மிக முக்கியத்துவம் வாய்ந்த நிபந்தனை ஒன்றை நிறைவேற்றினால் தான் ஐபோன் 6 விற்பனை அங்கு சாத்தியமாகும் என்றும் கூறப்படுகின்றது.
உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களின் விற்பனைக்கு, மிகப் பெரிய வர்த்தகம் இருந்தாலும், விற்பனையாகும் திறன்பேசிகளில் 25 சதவீதம் வர்த்தகம் சீனாவில் நடைபெறுகின்றது.
அதனால் ஆப்பிள் நிறுவனம் சீனச் சந்தைகளை இழப்பதற்கு தயாராக இல்லை. எனினும், ஐபோன்களை அமெரிக்க அரசின் உளவுக் கருவிகளாகவே பார்க்கும் சீனா, அதன் வர்த்தகத்தை தங்கள் நாட்டில் முடக்க பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகின்றது.
இந்நிலையில், கடந்த 9-ம் தேதி வெளியான ஐபோன் 6, பெரும் வர்த்தகச் சந்தையான சீனாவில் மட்டும் வெளியிடப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஆப்பிளுக்கு சீனா விடுத்துள்ள முக்கிய நிபந்தனைகள் ஆகும்.
தற்சமயம் சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அனுமதிக்கு ஆப்பிள் காத்திருக்கும் நிலையில், அமைச்சகம் ஐபோன்கள் ஊடாக அமெரிக்கா உளவு பார்க்கின்றதா தங்கள் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படுத்தும் காரணிகள் உள்ளனவவா என ஆராய்ந்து வருகின்றது.
ஆப்பிள் நிறுவனம் சீனாவில் ஐபோன் 6 திறன்பேசிகளின் விற்பனை பற்றி எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காத நிலையில், விரைவில் சீனாவில் ஐபோன் 6 விற்பனைக்கு வரும் என்று மட்டும் கூறிவருகின்றது.