கான்பெரா, செப்டம்பர் 20 – ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தை தாக்கி, அங்குள்ள முக்கியத் தலைவர்களை கொலை செய்யத் திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளின் சதி, அந்நாட்டு உளவு அமைப்பால் முன்னரே கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலக நாடுகள் தங்கள் எதிரி நாடுகளை முடக்க முன்னின்று விதைத்த தீவிரவாதம், தற்போது அவர்களுக்கே மிகவும் அச்சுறுத்தலான ஒன்றாக மாறிகொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாடுகளின் அமைதியையும் குறி வைத்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாத அமைப்பினர், தற்போது தங்கள் கவனத்தை மேற்குலக நாடுகளின் பக்கம் திருப்பி உள்ளனர். இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையை தாக்கியது போல், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தாக்குதல் நிகழ்த்த திட்டமிட்டிருந்த சதி தற்போது அம்பலமாகி உள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் கூறுகையில், “அரசு அமைப்புகள் மீதும், தலைவர்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் மீதும் தாக்குதல் நடத்துவது குறித்து பயங்கரவாதிகள் நிகழ்த்திய உரையாடல்களை உளவுத்துறையினர் இடைமறித்துக் கேட்டுள்ளனர். ஆகவே, இனி எல்லா நேரங்களிலும் நாடாளுமன்றக் கட்டிடத்தைச் சுற்றி ஆயுதம் தாங்கிய காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்” என்று கூறியுள்ளார்.