ஜெனீவா, செப்டம்பர் 20 – இலங்கையில் 2009-ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது 40,000-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என ஐ.நா மதிப்பிட்டிருந்தது.
இதை இலங்கை அரசு ஏற்கவில்லை. இந்த மனித உரிமை மீறல் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை அணையக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐ.நா. குழு இலங்கைக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமை அணையக் கூட்டம் ஜெனீவாவில் நடந்து வருகிறது.
அப்போது அமெரிக்கா ஓர் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், ‘உலக அளவில் இலங்கை மட்டுமின்றி ருவாண்டா, போஸ்னியா, தார்பர், சிரியா உள்ளிட்ட நாடுகளில் மனித உரிமை மீறல்கள் உள்ளன.
இங்கு அனைத்துலக சமுதாயம் விரைந்து செயல்பட தவறிவிட்டது. அவ்வாறு விரைந்து செயல்பட்டிருந்தால், இலங்கையில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். நிறைய உயிர்களை காப்பாற்ற முடிந்திருக்கும்’ என கூறப்பட்டுள்ளது.