கோலாலம்பூர், செப்டம்பர் 22 – தேர்தல் வாக்கெடுப்பை நேரலையாக வெளியிடும் அளவிற்கு மலேசியர்கள் இன்னும் பக்குவமடையவில்லை என தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அஜீஸ் முகமட் யூசோப் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் அப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டுமானால், வேட்பாளர்கள், கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் அரசியலில் இன்னும் பக்குமடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அப்துல் அஜீஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாக்குகள் கணக்கெடுப்பு நடைபெற்று முடியும் போது வேட்பாளர்களின் பிரதிநிதிகள் அறைக்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அந்த நேரத்தில் அதை நேரலையாகப் பாத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு தவறான புரிதல் ஏற்பட்டு தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தொலைக்காட்சியில் பார்க்கும் மக்கள் இந்த நிகழ்வை வேறு ஒரு கோணத்தில் புரிந்து கொள்வார்கள். கடைசியில் எல்லா தவறுகள் தேர்தல் ஆணையத்தின் மீது சுமத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சில குறிப்பிட்ட விஷமிகள் இந்த நேரலையை சாக்காக வைத்து, மக்களிடையே தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது என்றும் அப்துல் அஜீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களைச் சேர்ந்தவர்களை வாக்குகள் கணக்கெடுக்கும் அறைக்குள் அனுமதிப்பது குறித்தும் தேர்தல் ஆணையம் யோசிப்பதாகவும், காரணம் சிறப்பான செய்திகள் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் என்ன வேண்டுமானால் அங்கு நடக்கலாம் என்றும் அப்துல் அஜீஸ் கவலை தெரிவித்துள்ளார்.
“வாக்குகள் கணக்கெடுப்பை நேரலையாக வழங்குவதில் தேர்தல் ஆணையத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அதே நேரத்தில் அந்த முடிவு நாளை தேர்தல் ஆணையத்தையே குறை சொல்லும் அளவிற்கு திரும்பி விடக்கூடாது என்றே அஞ்சுகின்றோம்” என்றும் அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ள நடைமுறைப்படி, எல்லா இடைத்தேர்தலிலும், வாக்குகள் கணக்கெடுப்பை, ஃபிலிம் நெகாராவைச் சேர்ந்த அதிகாரி மட்டுமே அரசாங்கம் சார்பில் தக்க பாதுகாப்புகளுடன் படம்பிடித்து வருவதாகவும் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 20 -ம் தேதி பெங்காலான் குபோர் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நூர் சாஹிடி ஓமார் (படம்) புற்று நோய் காரணமாக காலமானதைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 25 -ம் தேதி அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.