செப்டம்பர் 22 – கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கிய ஐபோன் 6-இன் விற்பனை உலகளாவிய அளவில், முதல் வார இறுதியிலேயே 10 மில்லியனுக்கும் அதிகமாக விற்று சாதனை புரிந்துள்ளது.
இது ஒரு புதிய சாதனையாக கருதப்படுகின்றது என்பதோடு, ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்த்ததை விட கூடுதலான எண்ணிக்கையில்தான் ஐபோன்கள் விற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் ஐபோன் 5 ரக திறன் பேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது முதல் வார இறுதியில் 9 மில்லியன் விற்பனையான சாதனை நிகழ்ந்தது.
உலகமெங்கும் பல நகர்களில் ஐபோன்கள் விற்பனை தொடங்கிய முதல் ஓரிரண்டு நாட்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து புதிய ஐபோன்களை வாங்கிச் சென்றனர்.
அந்தக் காட்சிகளில் சிலவற்றை இங்கே காணலாம்:-படங்கள
19 செப்டம்பர் 2014ஆம் நாள், ஐபோன் திறன்பேசிகள் முதன் முதலாக விற்பனை கண்ட நாடு ஆஸ்திரேலியாதான். ஆஸ்திரேலியத் தலைநகர் சிட்னியிலுள்ள ஆப்பிள் விற்பனை மையத்தில் ஐபோன் வாங்குவதற்கு வரிசை கட்டி நிற்கும் பயனர்கள்….
நிறுவனத்தின் சின்னம் ஆப்பிளைக் கையிலேந்தி, ஐபோன் கருவிகளின் பிதாமகர் ஸ்டீவ் ஜோப்சின் உருவம் தாங்கிய தலையணையோடு, புதிய ஐபோன் 6ஐ வாங்குவதற்கு வரிசையில் முதல் நாள் இரவே இடம் பிடித்து காத்து நிற்கும் இளம் மங்கை. ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவின் கின்சா வர்த்தகப் பகுதியில் ஆப்பிள் விற்பனை மையத்தின் காட்சி இது…
நியூயார்க் நகரின் ஐந்தாவது அவென்யூ பகுதியில் 59வது தெருவில் உள்ள ஆப்பிள் விற்பனை மையத்தில் ஐபோனை முதல் நாளிலேயே வாங்கி விட வேண்டுமென்ற வேட்கையோடு, நீண்ட வரிசையில் கால் கடுக்க நிற்கும் பயனர்கள்…
ஹாங்காங் நகரின் ஆப்பிள் விற்பனை மையத்தில் ஐபோனை வாங்குவதற்கு வரிசை பிடித்து நிற்கும் கூட்டம் ஒருபுறம். ஹாங்காங்கில் உள்ள ஆப்பிள் நிறுவன தொழிற்சாலையில் தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்கள் மீறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுடன், மாணவர் மற்றும் கல்வி அறிஞர்கள் போராட்டக் குழுவினரால் தொங்கவிடப்பட்டுள்ள பிரம்மாண்ட பதாகை….
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள ஆப்பிள் விற்பனை மையத்தின் முதல் நாள் காட்சி இது…
மத்திய இலண்டனிலுள்ள கொவெண்ட் கார்டன் பகுதியிலுள்ள ஆப்பிள் விற்பனை மையத்தில், ஐபோன் வாங்குவதற்கு ஆர்வத்தோடு காத்திருக்கும் மக்கள்….
ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள ஆப்பிள் விற்பனை மையத்திலும் ஆர்வம் குறையாமல் அதிகாலையிலேயே வரிசையில் இடம் பிடித்து நிற்கும் மக்கள்….
படங்கள்: EPA