ஆம்ஸ்டர்டாம், செப்டம்பர் 24 – முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், வடக்கு நெதர்லாந்தில் சுமார் 773.58 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு புதிய ‘தரவு மையம்’ (Data Center) ஒன்றை அமைக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மார்க் ஜென்சென் கூறுகையில், “120 மெகா வாட்டில் இயங்கும் இந்த தரவு மையத்தின், ‘சர்வர்’ (Server) செயல்பாடுகள் வரும் 2016-ம் ஆண்டு முதல் செயல்படும். எனினும். முழுச் செயல்பாடுகள் 2017-ம் ஆண்டின் இறுதியில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கின்றோம். இந்த புதிய மையத்தின் மூலம் 150 நிலையான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.
கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பாவில், பின்லாந்து, அயர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் தரவு மையம் இருப்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் தனது புதிய தரவு மையம் பற்றிய அறிவிப்பினைத் தொடர்ந்து, ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் ஐரோப்பாவில் புதிய தரவு மையம் அமைப்பது பற்றி ஆலோசித்து வருவதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.