Home நாடு யூபிஎஸ்ஆர்: மறுதேர்வு தவறான முடிவு – அரசு சார்பற்ற நிறுவனம் எதிர்ப்பு

யூபிஎஸ்ஆர்: மறுதேர்வு தவறான முடிவு – அரசு சார்பற்ற நிறுவனம் எதிர்ப்பு

614
0
SHARE
Ad

UPSRகோலாலம்பூர், செப்டம்பர் 25 – யூபிஎஸ்ஆர் தேர்வு தொடர்பிலான கணிதம், தமிழ், ஆங்கிலம் மற்றும் அறிவியல்
பாடங்களின் தேர்வுத்தாள்கள் வெளியானதையடுத்து மறுதேர்வு நடத்தப்படுவது ஒரு தவறான நடவடிக்கை என அரசு சார்பற்ற இயக்கம் தெரிவித்துள்ளது.

“மறு தேர்வு காரணமாக தேவையற்ற மன அழுத்தம், நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் மீது இரக்கம் காட்ட கல்வி அமைச்சு தவறிவிட்டது,” என்று பேஜ் (PAGE) அமைப்பின் தலைவர் டத்தின் நூர் அசிமா அப்துல் ரகிம் தெரிவித்தார்.

யூபிஎஸ்ஆர் தேர்வில் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெறுவது உறைவிடப் பள்ளி உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் நிறைந்த பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே ஆதாயம் தரும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

#TamilSchoolmychoice

“எனவே ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட செயல் நடைமுறைகளில் தவறு நிகழ்ந்துள்ள நிலையில், ஆங்கிலம், தமிழ் மற்றும் கணிதப் பாடங்களுக்கு மாணவர்களை மறுதேர்வு எழுத வைக்கக் கூடாது” என்றார் அவர்.

“ஏற்கெனவே மாணவர்கள் எழுதிய ஆங்கிலம், கணிதம் மற்றும் தமிழ் தேர்வுகளை யூபிஎஸ்ஆர் ஏற்க வேண்டும். அறிவியல் தேர்வு இன்னும் நடைபெறவில்லை என்பதால் அதற்கு தேர்வு நடத்தலாம்.       மறுதேர்வு  வேண்டாம் என்பதால், மோசடி செய்தவர்களை மன்னிக்க வேண்டும் என நாங்கள் கூறுவதாக அர்த்தமல்ல. மோசடி செய்துள்ள மாணவர்கள், தங்கள் திறமையையும் உழைப்பையும் நம்பாமல் போனதால் பிற்காலத்தில் பல சிரமங்களை எதிர்கொள்வர். ஆனால் மறுதேர்வு காரணமாக குறிப்பிட்ட சில மாணவர்கள்
பாதிக்கப்படுவர் என்பதே எங்கள் கவலை,” என்றார் நூர் அசிமா.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழா வண்ணம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிகக் கவனமுடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.