தீர்ப்பை அடுத்து இன்றிரவு அவர் பெங்களூரு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தவுடன், அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, அவர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்க வைக்கப்படலாம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 ஆண்டு சிறைத் தண்டனையோடு, நூறு கோடி அபராதமும் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா உள்ளிட்ட மற்றவர்களுக்கும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை காரணமாக, ஜெயலலிதா சட்டப்படி அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது.
இதற்கிடையில், தமிழகத்தில் வன்முறை வெடித்துள்ளதாகவும், எங்கும் பதற்றம் நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் திரையரங்குகளும், விற்பனை மையங்களும், பேரங்காடிகளும் மூடப்பட்டு விட்டன.
ஜெயலலிதா இந்த தீர்ப்பைத் தொடர்ந்து மேல் முறையீடு செய்யலாம் என்றாலும், அந்த மேல் முறையீட்டை கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில்தான் செய்ய முடியும் என்றும், எதிர்வரும் அக்டோபர் 5ஆம் தேதி வரை கர்நாடக நீதிமன்றங்களுக்கு தசரா விழாவை முன்னிட்டு விடுமுறை என்பதால், அக்டோபர் 5ஆம் தேதிக்குப் பிறகுதான் அவரது மேல் முறையீடு விசாரிக்கப்படும் எனத் தெரிகின்றது.