சென்னை, செப்டம்பர் 27 – சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததையடுத்து, தமிழகத்தில் அதிமுக-வினர் ஆங்காங்கே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நிலவுகின்றது.
மதுரையில் பதற்ற நிலை அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவினர் கடைகள் மீது கல்வீச்சில் ஈடுபட்டு வன்முறை செய்து வருகின்றனர்.
மதுரையில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் வீட்டின் மீது கல்வீச்சு நடந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
மதுரையிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை பெரம்பலூர் மாவட்டங்களில் கடைகள், விற்பனை மையங்கள் மூடப்பட்டு வருகின்றன. தெற்கு மாவட்டங்களிலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.சென்னையில் பல இடங்களில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியிலும் பதற்றம் நிலவுகின்றது.
ஆங்காங்கு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது மகன்கள் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோரின் சுவரொட்டிகளும், பதாகைகளும் கிழிக்கப்பட்டு வருவதால், மோதல்கள் உருவெடுத்துள்ளன.