Home நாடு மேலும் 3 வங்கி தானியங்கி இயந்திரங்களில் மோசடி!

மேலும் 3 வங்கி தானியங்கி இயந்திரங்களில் மோசடி!

608
0
SHARE
Ad

ATM MACHINEகோலாலம்பூர், செப்டம்பர்  30 – கோலாலம்பூர் மற்றும் மலாக்காவில் மேலும் 3 தானியங்கி பணப் பரிமாற்று நிலையங்களில் மோசடி வேலை நடந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அண்மைக் காலத்தில் மோசடி வேலை நடந்த தானியங்கி பணப்பரிமாற்று நிலையங்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய இரு தினங்களில் சிலாங்கூரில் பத்துக்கும் மேற்பட்ட தானியங்கி பணப்பரிமாற்று நிலையங்களில் மோசடி வேலை நடந்திருப்பது தெரிய வந்தது.

#TamilSchoolmychoice

இது குறித்து தீவிர விசாரணை நடந்துவந்த நிலையில், தற்போது மேலும் சில தானியங்கி பணப்பரிமாற்று நிலையங்களில் மோசடி நடந்துள்ளது.

கோலாலம்பூரில் ஜாலான் இம்பியில் உள்ள யுனைடெட் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம் நிலையத்தில் வெ.92,900 மோசடி நடந்திருப்பது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக அந்த வங்கியின் மேலாளர் செவ்வாய்க்கிழமை மாலை 2.30 மணிக்கு புகார் அளித்ததாக காவல்துறை தரப்பு தெரிவித்தது.

தானியங்கி பணப்பரிமாற்று நிலையத்தில் உள்ள ரகசிய கேமரா பதிவுகளை பார்வையிட்ட போது சந்தேகத்திற்குரிய ஒரு நபர் செவ்வாய்க்கிழமை காலை 9.20 மணிக்கு அந்நிலையத்தில் நுழைந்து பணம் எடுத்திருப்பது தெரியவந்தது.

முந்தைய மோசடி வேலைகளில் கையாண்ட அதே வழிமுறையை அந்த சந்தேக நபர் இம்முறையும் பின்பற்றி இருப்பது உறுதியாகி உள்ளது என கூட்டரசுப் பிரதேச காவல்துறை அதிகாரி முகமட் கமாருடின் தெரிவித்தார்.

“அக்குறிப்பிட்ட தானியங்கி பணப்பரிமாற்று நிலையத்தில் நான்கு முறை நுழைந்த அந்நபர் யாரிடமோ கைபேசியில் பேசுகிறார். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு உடைகளை அணிந்திருந்தார். எந்த பொத்தான்களையும் தொடாமலேயே அவர் தானியங்கி பணப்பரிமாற்று இயந்திரத்தில் இருந்து தொகையை எடுத்துள்ளார்,” என்றார் முகமட் கமாருடின்.

இதற்கிடையே மலாக்காவில் உள்ள அல் ரஜ்ஹி வங்கிக்கிளையில் வெ.232,770 தொகையும், அஃபின் வங்கிக் கிளையில் வெ.122,800 தொகையும் ஐந்து மர்ம நபர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது.

“மற்ற மாநிலங்களில் நடந்துள்ளது போலவே இங்கும் மோசடி வேலை நிகழ்ந்துள்ளது. இதற்காக காவல் துறை தலைமையகம் புக்கிட் அமான்னுடன் இணைந்து விசாரணை மேற்கொள்ளப்படும்,” என மலாக்கா காவல்துறை தலைவர் டத்தோ சுவா கீ லே தெரிவித்துள்ளார்.

இதுவரை நாடு முழுவதும் 17 தானியங்கி பணப்பரிமாற்று நிலையங்களில் நடந்துள்ள மோசடி வேலைகளின் மூலம் வெ.3 மில்லியன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.