Home உலகம் தீவிரவாத ஒழிப்பில் இணையும் இந்தியா-அமெரிக்கா

தீவிரவாத ஒழிப்பில் இணையும் இந்தியா-அமெரிக்கா

568
0
SHARE
Ad

india-button-flag-mapவாஷிங்டன், அக்டோபர் 1 – தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்  என்று இந்தியா-அமெரிக்கா சார்பில் நேற்று வெளியான தொலைநோக்குத் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. சபைக் கூட்டம், மான்ஹட்டன் விருந்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இந்நிலையில், நேற்று அந்நாட்டு அதிபர் ஒபாமாவை சந்தித்த மோடி, வர்த்தகம், பாதுகாப்பு, உலக நடப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

#TamilSchoolmychoice

மோடிக்கு ஒபாமா அளித்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக, இந்தியா – அமெரிக்கா சார்பில் தொலைநோக்குத் திட்டங்கள் குறித்த அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

“இந்தியா-அமெரிக்கா இடையே அதிகரித்துள்ள ஒத்துழைப்பின் மூலம், இரு நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்பு மேம்பாடு அடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தீவிர ஆலோசனைகள், கூட்டுப் பயிற்சிகள், தொழில்நுட்பப் பரிமாற்றம், பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதால் இரு நாட்டு வட்டாரங்களையும், உலகத்தையும் பாதுகாப்பாக இருக்கச் செய்ய முடியும்.”

US President Barack Obama meets with Prime Minister Narendra Modi of India“பல்வேறு கலாசாரங்கள், நம்பிக்கைகள் கொண்ட சிறந்த ஜனநாயக நாடுகளாக இந்தியாவும், அமெரிக்காவும் திகழ்ந்து வருகின்றன. அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்படுவது இரு நாடுகளுக்கும் மட்டுமல்லாமல் உலகத்துக்கே சிறந்த பலனைக் கொடுக்கும்”

“இரு நாடுகளும் இணைந்து தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக கூட்டு நடவடிக்கைகளை எடுக்கும். மேலும், இரு நாடுகளிலும், பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழாமல் தடுக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்”.

“மனித இனத்துக்கு பேரழிவுகள் ஏற்படும்போதும், இரு நாடுகளும் இணைந்து விரைந்து நடவடிக்கை எடுக்கும். மனித இனத்திற்கு அழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்களின் பரவலை, இரு நாடுகளும் இணைந்து தடுக்கும். அணு ஆயுதக் குறைப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.