சென்னை, அக்டோபர் 1 – முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை பார்க்க ஜெயலலிதா விரும்பாததால், அவர்கள் சென்னை திரும்பினார்களாம். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை, முதல்வர் பன்னீர்செல்வம் பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மாலை சென்றார்.
இரவில் எச்.ஏ.எல். பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார். அங்கு சில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து நேற்று காலை அவர் சிறைக்கு சென்று ஜெயலலிதாவை சந்திக்க இருப்பதாக போலீசாருக்கும், சிறைத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்தது.
இதனால் பாதுகாப்பு பணிக்காக போலீசார் வாகனங்களில் வந்து குவிந்தனர். அந்தப் பகுதியில் 144 தடை தீவிர அமலில் இருந்தது. எனவே, சோதனைக்கு பின்னரே பரப்பன அக்ரஹாரா பகுதியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே பன்னீர்செல்வம் வருகை குறித்து 2 முறை ஜெயலலிதாவுக்கு தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் பன்னீர்செல்வம் உட்பட யாரையும், சந்திக்க ஜெயலலிதா விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் தங்கும் விடுதியிலேயே அவர் தங்கியிருந்தாராம். பிற்பகலில், சசிகலாவிடம் இருந்து ஒரு கடிதம் மட்டும் பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர் நேற்று மாலை 5.35 மணிக்கு சென்னை திரும்பினாராம்.