கோலாலம்பூர், அக்டோபர் 3 – தமிழகத்தில் உள்ள மலேசியர்கள் (மாணவர்கள் உட்பட) யாரும் அங்கு நடந்து வரும் போராட்டங்கள் காரணமாக காயமடையவில்லை என சென்னையில் உள்ள மலேசியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொது போக்குவரத்தும், வணிக நடவடிக்கைகளும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன என்றாலும், சென்னை உட்பட மாநிலம் முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாக வெளியாகும் தகவல்கள் காரணமாக பதற்றச் சூழ்நிலை காணப்படுவதாக மலேசிய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“எனவே தமிழகத்தில் உள்ள மலேசியர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்ய உரிய முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போராட்டங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது,” என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
தமிழகம் செல்லும் மலேசியர்கள், தங்களது வருகை மற்றும் இருப்பிடம் குறித்து சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை மேலும் அறிவுறுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள மலேசியத் தூதரகத்தை +091-44-24334434/35/36 ஆகிய தொலைபேசி எண்களிலும், mwchennai@kln.gov.my என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை மற்றும் நூறு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.