கோலாலம்பூர், அக்டோபர் 7 – 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும், ஜிஎஸ்டி எனப்படும் ‘பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி’ (Goods and Services Tax) மூலம், தனி நபருக்கு 3 சதவீதம் வரை வருமான வரி குறைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக துணை நிதி அமைச்சர் டத்தோ சுவா தி யோங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“50,000 ரிங்கெட்டுகள் முதல் 70,000 ரிங்கெட்டுகள் வரை வருமானம் பெறுவோருக்கான தற்போதய வருமானவரி மதிப்பு 19 சதவீதமாகும். எனினும், ஜிஎஸ்டி நடைமுறைக்கு வரும் பொழுது அது 16 சதவீதமாக குறைக்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு 600 ரிங்கெட்டுகள் வரை சேமிக்க இயலும்.”
“இதன் மூலம் 2015-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த பயனை பெறுவர். அதேவேளையில், நிறுவனங்களுக்கு வருமான வரி 1 சதவீதம் அளவிற்கு குறைக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும்,தனி நபர் மற்றும் நிறுவனங்களுக்கான வரி குறைப்பைத் தவிர பல பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.