வெனிஸ், அக்டோபர் 5 – ஆங்கிலப் படவுலகின் அம்சமான கதாநாயகர்களில் ஒருவர் ஜோர்க் க்ளூணி. வயது ஐம்பதைக் கடந்து விட்டாலும், இள நரையோடு கூடிய அவரது தோற்றத்திற்கும், ஸ்டைலான நடிப்புக்கும் உலகெங்கும் இரசிகர் கூட்டம் உண்டு.
ஹாலிவுட் நடிகர்களுக்கே உரிய பாணியில் பல நடிகைகளுடன் இணைத்துப் பேசப்பட்டாலும், இறுதிவரை, கடந்த பல ஆண்டுகளாக திருமணம் என்ற பந்தத்தில் சிக்காமல் தப்பித்து வந்தவர், அண்மையில் அமல் அலாமுடின் என்ற அழகிய வழக்கறிஞரை மணந்தார்.
ஜோர்ஜ் க்ளூணி, வழக்கறிஞர் அமல் அலாமுடின் திருமணத்திற்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் செலவானதாகக் கூறப்படுகிறது.
உலகின் கவனத்தை ஈர்த்த இவர்களின் திருமணம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இத்தாலியின் புகழ் பெற்ற உல்லாச சுற்றுலா நகரான வெனீசில் நடைபெற்றது.
சின்டி கிராஃபர்ட் மற்றும் அவரது கணவர் ராண்டே கெர்பர், மாட் டெமான் – லூசியானா தம்பதியர் உள்ளிட்ட சுமார் நூறு பேர் மட்டுமே இந்தத் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இத்திருமணத்திற்கான செலவு 5 மில்லியன் முதல் 13 மில்லியன் டாலர் வரை இருக்கக்கூடும் என்று வெளியான தகவல்கள் தவறானவை என க்ளூணிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதே போல், திருமணம் முடிந்த பிறகு நட்சத்திர தங்கும் விடுதி ஒன்றில் நடைபெற்ற விருந்துக்கான செலவை அமல் அலாமுடின் குடும்பத்தார் செலுத்தவில்லை என்று வெளியான தகவலையும் அந்த வட்டாரங்கள் மறுத்துள்ளன.