புதுடெல்லி, அக்டோபர் 8 – இந்திய வம்சாவளிகளுக்கு ஆயுட்கால விசா வழங்கப்படுகிறது. அதைத் தவிர குறிப்பிட்ட சூழ்நிலையைத் தவிர இந்தியாவுக்கு வரும் அமெரிக்க பயணிகளுக்கு 10 ஆண்டுகால விசா வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மாத இறுதியில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இரு தரப்பு உறவை மேம்படுத்தும் வகையில், அமெரிக்க பயணிகள் இந்தியாவுக்கு வந்தபிறகு விசா எடுத்துக் கொள்ளும் திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார்.
இதனிடையில் செப்டம்பர் 30-ம் தேதி இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து புதிய நடைமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக மோடி தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
விசா குறித்தும் தூதரகங்கள் குறித்தும் கடந்த 28-ம் தேதி நான் நியூயார்க்கில் பேசினேன். இந்திய அரசு மிக விரைவாக செயல்பட்டு அதற்கு செயல்வடிவம் கொடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று தனது செய்தியில் மோடி கூறியுள்ளார்.
புதிய திட்டத்தின்படி, இந்திய வம்சாவளி அடையாள அட்டை வைத்துள்ளவர்களுக்கு இனி ஆயுட்கால விசா வழங்கப்படும். இதற்கு முன்பு 15 ஆண்டுகளுக்கு விசா வழங்கப்பட்டது.
அதன்படி இனி 180 நாட்களுக்கு மேல் இந்தியாவில் தங்கினாலும், காவல் நிலையம், தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை.
மேலும் இந்திய வம்சாவளி அடையாள அட்டை திட்டத்தையும், வெளிநாட்டு இந்தியக் குடியுரிமை திட்டத்தையும் ஒருங்கிணைப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
அதைத் தவிர அனைத்து நாட்டில் உள்ள தூதரகங்கள், துணைத் தூதரகங்களுக்கும் தனி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறப்பு சூழ்நிலையை தவிர மற்ற நிலையில், அமெரிக்க பயணிகளுக்கு 10 ஆண்டு விசா வழங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
“இதன் மூலம் இந்தியா, அமெரிக்கா இடையேயான நட்புறவு பலப்படும். மேலும் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் புதிய மைல்கல்லாக இது அமையும்“ என்று தனது டுவிட்டர் செய்தியில் மோடி கூறியுள்ளார்.