கோலாலம்பூர், அக்டோபர் 11 – நாடாளுமன்றத்தில் நேற்று 2015-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை பிரதமரும், நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வாசித்தார்.
அதன் படி, மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்வரும் 2015-ம் ஆண்டில் 5 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதத்திற்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக தனியார் துறையின் வளர்ச்சி மலேசியப் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
மேலும், அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நோக்கி நாடு பயணித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
2014-2015-ம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
“மலேசியாவிற்கான அயல்நாட்டுத் தேவைகள் மற்றும் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக இருக்கின்றன. இந்த வளர்ச்சியில், உற்பத்தி துறையும், சேவைகள் பிரிவும் பெரும் பங்கு வகிக்கும் என்பது மட்டும் உறுதியான கணிப்பாகும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனித்தனி துறைகளுக்கான பொருளாதார வளர்ச்சி பற்றி கீழே காண்போம்:
சேவைத் துறை:
2015-ம் ஆண்டில் நாட்டின் சேவைப் பிரிவு 5.6 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது நடப்பு 2014-ம் ஆண்டில் 5.9 சதவிகிதமாக இருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வேளாண்மை துறை:
வேளாண்மைத் துறையில் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தித் துறை:
உற்பத்தி துறையில் நாட்டின் வளர்ச்சி 5.5 சதவிகிதமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. நடப்பு ஆண்டில் இதன் வளர்ச்சி 6.4 சதவிகிதமாக இருக்கும். எனினும் 2015-ம் ஆண்டு இறுதியில் வளர்ச்சி சதவிகிதம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகப் பொருளாதாரம் 2015-ம் ஆண்டில் மந்த நிலையை எட்டும் என அனைத்துலக நிதி வாரியம் (IMF) கணித்துள்ள நிலையில், தெற்காசிய அளவில் மலேசியப் பொருளாதாரம் உச்சத்தை நோக்கி பயணம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.