ரியோடி ஜெனீரோ, அக்டோபர் 11 – வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கடந்த செப்டம்பர் மாதம் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்கள் பலர் குயர்ரோ மாகாணத்தில் உள்ள இகுவாலா நகரில் போராட்டம் நடத்தினர். அப்போது மாணவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
அப்போது மாணவர்கள் சென்ற பேருந்தின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து சுமார் 40 மேற்பட்ட மாணவர்களை காணவில்லை என்றும் புகார் எழுந்தது. காணாமல் போன மானவர்களை காவல்துறையினர் கடத்தி சென்று கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் 6 புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் எரிந்த நிலையில் 23 சடலங்கள் மீட்கப்பட்டன. அது பற்றிய விவரங்கள் இன்னும் வெளிவராத நிலையில் நேற்று முன்தினம், மேலும் 4 புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றிலும் எரிக்கப்பட்ட நிலையில் சடலங்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதன் காரணமாக, மெக்சிகோவில் காவல்துறையினருக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகின்றது. அந்நாட்டு அரசும் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.