பெட்டாலிங் ஜெயா : ஜேய்ன் ராய்யான் என்ற சிறுவனின் கொலை தொடர்பில் 7-வது நாளாக விசாரணையைத் தொடர்ந்துவரும் காவல் துறையினர் 2-வது முறையாக கொலை நடந்ததாக நம்பப்படும் குடியிருப்புப் பகுதியில் வீட்டுக்கு வீடு சோதனைகள் நடத்தி புதிய தடயங்களைச சேகரித்துள்ளனர். இடாமான் அபார்ட்மெண்ட், டாமன்சாரா டாமாய் வட்டாரத்தில் உள்ள R புளோக் குடியிருப்பில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஜேய்ன் ராய்யான் 6 வயது கொண்ட – ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட – சிறுவனாவான்.
சேகரிக்கப்பட்ட புதிய தடயங்கள் இராசாயன இலாகாவுக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டிருக்கின்றன.
சம்பந்தப்பட்ட அடுக்ககக் குடியிருப்பில் உள்ளவர்கள் தங்களின் அன்றாடப் பணிகளைத் தொடரலாம் என்றும் ஆனாலும் இயன்றவரை தங்களின் இல்லங்களிலேயே தங்கியிருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
அண்மையில் ஜேய்ன் ராய்யான் குடியிருந்த டாமன்சாரா டாமாய் வட்டாரத்தின் இடாமான் அடுக்கக குடியிருப்பைச் சேர்ந்த 228 நபர்களிடம் இருந்து மரபணு மாதிரிகளை காவல் துறையினர் சேகரித்துள்ளனர்.
வீடுவீடாகச் சென்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, மரபணு மாதிரிகளும் வீடு வீடாகச் சென்று சேகரிக்கப்பட்டன என்றும் மிக விரிவான நடவடிக்கை இது என்றும் சிலாங்கூர் காவல் துறை தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் தெரிவித்திருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) காலை வரை 5,628 நபர்களும் 2,484 இல்லங்களும் பரிசோதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அந்த வட்டாரத்தில் 18 அடுக்கக குடியிருப்புகள் இருக்கின்றன.
பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 278 காவல் துறை அதிகாரிகள் ஜேய்ன் ராய்யான் கொலைவழக்கு விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் காவல் துறை தெரிவித்தது.
ஜேய்ன் ராய்யானின் கொலை செய்யப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மோப்பம் பிடிக்க மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன.
கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) ஜேய்ன் ராய்யான் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டான். அதன் பின்னர் தேடுதல் வேட்டை தொடங்கியது. அடுத்த நாள் அந்தச் சிறுவனின் உடல் அவனின் இல்லத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.
உடற்கூறு பரிசோதனைக்குப் பின்னர் ஜேய்ன் ராய்யான் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் அறிவித்தனர்.